Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 27 பிப்ரவரி (ஹி.ச.)
கோவை போத்தனூர் பகுதியில் அமைந்துள்ள மகாத்மா காந்தி நினைவகத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டார்.
கோவைக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்திருந்த முதலமைச்சர், அதன் ஒரு பகுதியாக மகாத்மா காந்தி நினைவகத்திற்குச் சென்றார்.
நினைவக வளாகத்துக்குள் சென்ற முதலமைச்சருக்கு நினைவக நிர்வாகிகள் வரவேற்பளித்தனர். பின்னர் அங்குள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு, இந்திய விடுதலைப் போராட்டத்தில் அவருடைய பங்கு, கோவை மாவட்டத்துடன் தொடர்புடைய வரலாற்றுச் சம்பவங்கள் ஆகியவை குறித்து அமைக்கப்பட்டிருந்த புகைப்படக் கண்காட்சியை சுற்றிப்பார்த்தார்.
நினைவகத்தில் பாதுகாக்கப்பட்டிருந்த பழமையான ஆவணங்கள், அரிய புகைப்படங்கள் மற்றும் காந்தியடிகள் பயன்படுத்திய பொருட்கள் குறித்து அங்குள்ளவர்களிடம் முதலமைச்சர் விவரங்கள் கேட்டு அறிந்தார்.
முதலமைச்சரின் வருகையையொட்டி போத்தனூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. பொதுமக்கள் மற்றும் தி.மு.க. கட்சி நிர்வாகிகள் பலர் திரண்டு வரவேற்பு அளித்தனர்.
இந்த நிகழ்வில் அமைச்சர்கள்,மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / Durai.J