Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 27 பிப்ரவரி (ஹி.ச)
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது 73-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, ஆடம்பர விழாக்கள் மற்றும் விளம்பரங்களைத் தவிர்த்து, அமைதியான மற்றும் ஆக்கப்பூர்வமான பிரசாரப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கட்சி தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,
திராவிட முன்னேற்ற கழகம் தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சராக அனுமதிக்கப்பட்ட நெறிமுறைகளைப் பின்பற்றி நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்றும், உற்சாகம் எல்லை மீறாமல் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
பிறந்தநாளையொட்டி, ஏழை எளிய மகளிர், முதியோர், ஆதரவற்றோர், திருநர்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட சமூகத்தின் நலிவடைந்த பிரிவினருக்கு உதவி செய்வது, கழகக் கொடிகளை புதுப்பித்தல், புதிய கொடிகள் ஏற்றுதல், கிளைக் கழகப் பெயர்ப் பலகைகளை புதுப்பித்தல், அண்ணா மற்றும் கலைஞர் பெயரில் இயங்கும் படிப்பகங்களுக்கு நூல்கள் வழங்குதல், கழகத்தின் மூத்த உறுப்பினர்களை சிறப்பித்தல், பெருவாரியாக இரத்த தானம் செய்வது போன்ற சமூக நலச் செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு இப்போதே தேர்தல் பணிகளைத் திட்டமிட்டு தொடங்க வேண்டும் என்றும், திராவிட மாடல் அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல தொண்டர்கள் முழுமையாக செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இத்தகைய சமூகப் பணிகளும் தேர்தல் பணிகளும் தான் தமக்கான உண்மையான பிறந்தநாள் வாழ்த்தாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ