Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 27 பிப்ரவரி (H.S.)
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் 2வது தெருவைச் சேர்ந்த திருப்பதி என்பவரது மகன் மனோஜ்(18).
நேற்று இரவு அப்பகுதியில் நண்பர்களுடன் நின்று பேசிக்கொண்டிருந்தபோது திடீரென ஹெல்மெட் அணிந்து பைக்கில்வந்த ஒரு மர்ம கும்பல் அவர்களை தாக்க தொடங்கியதாக கூறப்படுகிறது.
அங்கு நின்றவர்கள் அனைவரும் தப்பித்து ஓட அப்போது மனோஜ் மட்டும் கீழே விழுந்துள்ளார். அப்போது அந்த கும்பல் மனோஜை வெட்டிவிட்டு தப்பி ஓடியது.
இதில் படுகாயம் அடைந்த மனோஜை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் இன்று அதிகாலையில் சிகிச்சை பலனில்லாமல் மனோஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட மனோஜ் நண்பர்கள் சிலர் பள்ளியில் படித்து வருவதாகவும் அந்த பள்ளியில் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக இந்த கொலைச் சம்பவம் நடைபெற்றதா அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் மனோஜை வெட்டி கொலை செய்த குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யக்கோரி அவரின் உறவினர்கள் கோவில்பட்டி - சாத்தூர் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்த தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி டிஎஸ்பி ஜெகநாதன், கிழக்கு காவல் நிலைய போலீசார் மாரியப்பன் மற்றும் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர்.
குற்றவாளிகளை விரைந்து கைது செய்வோம் என்று போலீசார் உறுதி அளித்ததை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர்.
இதனால் கோவில்பட்டி சாத்தூர் சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Hindusthan Samachar / GOKILA arumugam