Enter your Email Address to subscribe to our newsletters

ஜெருசலேம், 27 பிப்ரவரி (ஹி.ச.)
பிரதமர் மோடி இஸ்ரேல் நாட்டிற்கு இரண்டு நாள் பயணமாகச் சென்றிருந்தார்.
இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பிரதமர் மோடியை, அந்த நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேரடியாக வந்து வரவேற்றார்.
பிறகு, அந்த நாட்டு பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
இந்த உரைக்கு பிறகு, பிரதமர் மோடிக்கு 'நெசெட் சபாநாயகர்' பதக்கம் அளிக்கப்பட்டது. அந்த நாட்டு பாராளுமன்ற சபாநாயகர் அமீர் ஒகானா இதனை வழங்கினார்.
இதன் மூலமாக, இஸ்ரேல் பாராளுமன்றத்தின் மிக உயர்ந்த பதக்கத்தை பெறும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையையும், இஸ்ரேல் பாராளுமன்றத்தில் உரையாற்றிய முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையையும் பிரதமர் மோடி பெற்றுள்ளார். தொடர்ந்து ஜெருசலேமில் இருக்கின்ற யாத் வஷேம் நினைவு இடத்திற்கு பிரதமர் மோடி சென்றார்.
யாத் வஷேம் என்பது இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனியை ஆட்சி செய்த ஹிட்லரின் நாஜி படைகளால் கொல்லப்பட்ட சுமார் 60 லட்சம் யூதர்களுக்காக ஜெருசலேமில் கட்டப்பட்டுள்ள நினைவுச் சின்னமாகும். அந்த நினைவுச் சின்னத்தில் பிரதமர் மோடி பூங்கொத்து வைத்து மரியாதை செலுத்தினார்.
இதனை அடுத்து, இஸ்ரேல் அதிபர் ஈசாக் ஹெர்சாக்கை பிரதமர் மோடி நேற்று சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின்போது,
இந்தியா-இஸ்ரேல் நாடுகளுக்கு இடையிலான கல்வி, வேலைவாய்ப்பு, புதுமை, தொலைத்தொடர்பு போன்ற துறைகளில் ஒத்துழைப்பை அதிகப்படுத்துவது குறித்து இரண்டு தலைவர்களும் கலந்துரையாடினர்.
அதன் பிறகு, பாதுகாப்பு, வணிகம், தொழில்நுட்பம் மற்றும் விவசாயம் ஆகிய துறைகளில் இரண்டு நாடுகளின் உறவை மேம்படுத்துவது குறித்து பிரதமர் மோடி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுடன் விரிவாக பேசினார்.
இதன் விளைவாக, இந்தியா-இஸ்ரேல் இடையே விவசாயம், கல்வி, வர்த்தகம், செயற்கை நுண்ணறிவு, மீன்வளம் உள்ளிட்ட துறைகளில் ஒருவருக்கொருவர் உதவி செய்வதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
பிரதமர் மோடி மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு முன்னிலையில் இரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
தொடர்ந்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய பிரதமர் மோடி,
உலகத்தில் பயங்கரவாதத்திற்கு எவ்விடத்திலும் இடமில்லை என்பதில் இந்தியாவும் இஸ்ரேலும் உறுதியாக உள்ளன. மேற்கு ஆசியாவில் அமைதி நிலவ வேண்டும்.
அது இந்தியாவின் பாதுகாப்புடன் தொடர்புடையது. காசா அமைதி ஒப்பந்தம் உட்பட அமைதிக்கான முயற்சிகளை இந்தியா ஆதரிக்கிறது.
என்று கூறினார்.
இந்நிலையில், இஸ்ரேல் சுற்றுப்பயணத்தை முடித்த பிரதமர் மோடி, விமானத்தின் மூலம் இந்தியாவிற்குப் புறப்பட்டார்.
அவரை பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது மனைவி சாரா ஆகியோர் விமான நிலையத்தில் வழியனுப்பி வைத்தனர்.
பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்தின்போது, இரண்டு நாடுகளுக்கு இடையில் பல்வேறு துறைகளில் மொத்தம் 27 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன,என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / JANAKI RAM