Enter your Email Address to subscribe to our newsletters

கோவில்பட்டி, 27 பிப்ரவரி (ஹி.ச.)
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் 2-வது தெருவைச் சேர்ந்த திருப்பதி என்பவருடைய மகன் மனோஜ் (17) நேற்று இரவு தனது நண்பர்களுடன் அப்பகுதியில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, திடீரென இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம கும்பல் ஒன்று அவர்களை நோக்கிப் பாய்ந்து தாக்குதலில் ஈடுபட்டது.
கும்பலைக் கண்டு அங்கிருந்தவர்கள் தப்பியோடிய நிலையில், எதிர்பாராதவிதமாக மனோஜ் மட்டும் தடுமாறிக் கீழே விழுந்துள்ளார். இதனைப் பயன்படுத்திக்கொண்ட அந்த கும்பல், மனோஜை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடியது.
ரத்த வெள்ளத்தில் கிடந்த மனோஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு, கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காகச் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி மனோஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மனோஜின் மரணச் செய்தி கேட்ட அவரது உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் ஆத்திரமடைந்தனர். குற்றவாளிகளை உடனடியாக அடையாளம் கண்டு கைது செய்யக் கோரி, இன்று காலை கோவில்பட்டி - சாத்தூர் சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோவில்பட்டி டிஎஸ்பி ஜெகநாதன், கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் மாரியப்பன் மற்றும் போலீசார் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்துச் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என போலீசார் உறுதி அளித்ததை அடுத்து, உறவினர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.
இந்த மறியல் போராட்டத்தால் அந்த சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தற்போது போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, கொலையாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த மனோஜ் குமாரின் நண்பர் பூவரசனுக்கும், ஹரீஷ் என்பவருக்கும் இடையே பள்ளிப் பருவத்தில் படிக்கும்போது வாய்த்தகராறு இருந்து வந்துள்ளது.
இந்த முன்விரோதத்தின் தொடர்ச்சியாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டு, அது கொலையில் முடிந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. தப்பியோடியவர்களை பிடிப்பதற்கான முயற்சிகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b