காற்றில் சாய்ந்த வாழை மரங்கள் - நஷ்ட ஈடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
கோவை, 28 பிப்ரவரி (ஹி.ச.) கோவை புறநகர் வடக்கு பகுதியில், மலையோர கிராமங்களில், தென்னை, வாழை, சோளம், காய்கறிகள் பயிரிடப்படுகின்றன. இரு நாட்களுக்கு முன், சின்னதடாகம், நஞ்சுண்டாபுரம், மடத்துார், வரப்பாளையம் உட்பட பகுதிகளில் பலத்த காற்று வீசியது.
Banana trees bent in the wind


கோவை, 28 பிப்ரவரி (ஹி.ச.)

கோவை புறநகர் வடக்கு பகுதியில், மலையோர கிராமங்களில், தென்னை, வாழை, சோளம், காய்கறிகள் பயிரிடப்படுகின்றன.

இரு நாட்களுக்கு முன், சின்னதடாகம், நஞ்சுண்டாபுரம், மடத்துார், வரப்பாளையம் உட்பட பகுதிகளில் பலத்த காற்று வீசியது.

பல இடங்களில் நன்கு வளர்ந்த வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. சேதமான வாழை மரங்களுக்கு, தோட்டக்கலை துறை சார்பில் உரிய இழப்பீடு, கடந்த மூன்று ஆண்டுகளாக வழங்கப்படவில்லை என, விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து, கோவை மாவட்ட விவசாய சங்க நிர்வாகிகள் கூறியதாவது:

வாழைமரம் 12 மாத பயிர் ஒரு வாழைக்கன்றை நட்டு பராமரித்து, களைச் செடிகளை அகற்றி, மருந்து தெளித்து, பராமரிக்க ஒரு மரத்துக்கு குறைந்தபட்சம், 200 ரூபாய் செலவாகும். ஒரு ஏக்கரில் 1,000 வாழைக்கன்றுகள் நட்டு வளர்க்கலாம். பலத்த காற்று வீசும் போது, பல வாழை மரங்கள் முறிந்து விழுந்து விடுகின்றன.

ஆயிரம் வாழை மரங்களில், 330 வாழை மரங்கள் விழுந்தால் மட்டுமே அதாவது, 33 சதவீதம் விழுந்தால் மட்டுமே. குறிப்பிட்ட விவசாயி இழப்பீடு பெற தகுதியுடையவர் என வரையறுக்கப்பட்டுள்ளது.

அதுவும், ஒரு குலை தள்ளிய வாழை மரத்துக்கு, வெறும், 6 ரூபாய் மட்டும் அரசு வழங்க உத்தரவு உள்ளது. அந்த ஆறு ரூபாயும் கடந்த மூன்று ஆண்டுகளாக தோட்டக்கலை துறை வழங்கவில்லை.

தோட்டக்கலைத்துறை வழங்கும் ஆறு ரூபாய், அங்குள்ள வாழை மரங்களை அகற்றும் கூலிக்கு கூட தேறாது. இதுதொடர்பாக, தோட்டக்கலை துறை அதிகாரிகளை அணுகினால், அவர்கள் விவசாயிகளின் விண்ணப்பங்கள், பேரிடர் மேலாண்மை துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்கின்றனர்.

ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில், வாழைமரம் இழப்பு தொடர்பாக எந்த நஷ்டாடும் வரவு வைக்கப்படவில்லை.

வனத்துறையினர், வனவிலங்குகளால் வாழை மரங்கள் சேதமடைந்தால், மரம் ஒன்றுக்கு, 27 ரூபாய் வழங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தோட்டக்கலைத்துறை வாழை மரங்கள் சேதம் அடைந்தால் மரம் ஒன்றுக்கு, 200 ரூபாய் வீதம் நஷ்ட ஈடு தொகை வழங்கி, அதை உடனடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்க வேண்டும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

Hindusthan Samachar / vidya.b