Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 28 பிப்ரவரி (ஹி.ச.)
கோவை விமான நிலையம் அருகே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 2-ஆம் தேதி ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவி, அங்கு வந்த 3 பேரால் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
3 பேரும் அரிவாளை காட்டி மிரட்டி கல்லூரி மாணவியையும் ஆண் நண்பரையும் தாக்கி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.
இதுகுறித்து விசாரணை நடத்திய பீளமேடு காவல் நிலைய காவலர்கள், சதீஷ், அவரது சகோதரர் காளீஸ்வரன் மற்றும் தவசி ஆகிய 3 பேரை சுட்டுப்பிடித்தனர். இந்த வழக்கு மீதான விசாரணை, கோவை அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
நீதிபதி சுந்தர்ராஜன் முன்னிலையில் நடந்து வரும் இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவி, அவரது ஆண் நண்பர், உறவினர்கள், விசாரணை அதிகாரிகள் என 113 சாட்சியங்களிடம் விசாரணை நடைபெற்று முடிந்துள்ளது.
இருதரப்பிலும் இறுதிக்கட்ட வாதம் நிறைவடைந்த நிலையில், சதீஷ், காளீஸ்வரன், தவசி ஆகிய 3 பேரும் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர்.
அவர்களது வாதமும் நிறைவடைந்த நிலையில், வரும் 7ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி அறிவித்தார்.
Hindusthan Samachar / ANANDHAN