Enter your Email Address to subscribe to our newsletters

தேனி, 28 பிப்ரவரி (ஹி.ச.)
தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகாவிற்கு உட்பட்ட கீழவடகரை ஊராட்சி பகுதியில் உள்ள ஸ்டேட் பேங்க் காலனி, சுந்தர்ராஜ் நகர், கோல்டன் சிட்டி, பெருமாள்புரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதிகளில் பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் பொதுமக்கள், தாங்கள் வசித்து வரும் வீடுகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்குமாறு வருவாய்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களில் தொடர்ந்து மனுக்கள் அளித்து வந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் இதுவரை வீட்டுமனை பட்டா வழங்கப்படாததால் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக தங்களது கண்டனத்தை பதிவு செய்யும் வகையில் கீழவடகரை ஊராட்சி பொதுமக்கள் தேர்தலை புறக்கணிப்போம் என எச்சரிக்கை விடுத்து பகுதிகளில் பிளக்ஸ் பேனர்கள் அமைத்துள்ளனர்.
இந்த சம்பவம் பெரியகுளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தேர்தல் காலத்தை முன்னிட்டு பொதுமக்களின் இந்த அறிவிப்பு அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
உள்ளூர் நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Hindusthan Samachar / ANANDHAN