போதை ஊசி புழக்கம் - 4 இளைஞர்கள் கைது!
நாமக்கல், 28 பிப்ரவரி (ஹி.ச.) தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு அண்டை மாநிலங்களில் இருந்து கஞ்சா மற்றும் உயர்தர மெத
Drug


நாமக்கல், 28 பிப்ரவரி (ஹி.ச.)

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு அண்டை மாநிலங்களில் இருந்து கஞ்சா மற்றும் உயர்தர மெத்தபட்டமைன் போன்ற போதைப் பொருட்கள் கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம் காவல்துறையினரால் கடத்தல் கஞ்சாக்கள் பறிமுதல் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் போதை ஊசி பயன்படுத்தியதாக இருவரை போலீசார் கைது செய்துள்ள நிலையில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குமாரபாளையம் தட்டான்குட்டை பகுதியில் அமைந்துள்ள மயான பகுதியில் சில நபர்கள் போதை ஊசியை பயன்படுத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்ற போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பொழுது சில இளைஞர்கள் ஊசியை ஏற்றி போதையில் மிதந்து கொண்டிருந்தனர்.

சிலர் தப்பியோடிய நிலையில் இருவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் அந்த பகுதியில் போதை ஊசி மற்றும் மாத்திரைகளை விற்று வந்த ஹக்கீம், கார்த்திக், வசந்த் மற்றும் திருநாவுக்கரசு ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 120க்கும் மேற்பட்ட போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

மயானத்தில் வைத்து போதை ஊசி செலுத்தப்பட்ட சம்பவமும், அது தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்ட சம்பவமும் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Hindusthan Samachar / ANANDHAN