Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 பிப்ரவரி (ஹி.ச.)
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுகவுடன் கூட்டணி கட்சிகள் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன.
காங்கிரஸ், மதிமுக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆகிய கட்சியினருடன் திமுக தேர்தல் குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியதாவது,
இன்று மூன்று கோரிக்கைகளை முதல்வர் ஸ்டாலினிடம் நேரடியாக எடுத்துரைப்பதற்காக அவரை சந்தித்தேன்.
காயிதே மில்லத் பெயரில் ஒரு பல்கலைக்கழகம் அமைப்பதை திமுக தேர்தல் அறிக்கையில் சேர்க்க வலியுறுத்தினேன்.
உடனே அக்கோரிக்கையை தேர்தல் அறிக்கையில் சேர்ப்பதாக சொன்னார்கள்.
இரண்டாவது, வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கும், விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் கொடுப்பதை தடுப்பதற்கு மத்திய அரசு முயற்சி செய்கிறது.
எனவே, சூரிய சக்தி மூலம் இலவச மின்சாரம் வழங்க முடிவெடுக்க கோரிக்கை வைத்தேன்.
அதனையும் திமுக தேர்தல் அறிக்கையில் சேர்ப்பதாக சொன்னார்கள்.
மூன்றாவதாக, வீரபாண்டிய கட்டபொம்மனின் முன்னோர்கள் திருப்பரங்குன்றம் கோயிலில் 500-ஆண்டுகளுக்கும் மேலாக கட்டபொம்மன் சத்திரம் அமைத்து 9-வது மண்டகபடி செய்து வந்தனர்.
அவர்களின் நேரடி வாரிசு பீமராசா என்பவரிடம் முறைகேடாக கையெழுத்து பெற்று இன்னொரு குடும்பம், அந்த சத்திரம் எங்களுடையது என்று அறநிலையத்துறை மூலம் சொல்லியுள்ளனர்.
இதில் உரிய நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் கோரிக்கை வைத்தேன்.
அமைச்சர் சேகர்பாபுவிடம் இந்த பிரச்சினையை சொல்லி வேண்டிய ஏற்பாடுகளை செய்யச் சொல்லியுள்ளார்.
தொகுதிப் பங்கீடு பற்றி முதல்வரிடம் எதுவும் பேசவில்லை.
தொகுதிப் பங்கீடு குறித்து மதிமுக குழு முதற் சுற்று பேச்சு வார்த்தை நடத்தியுள்ளது.
மீண்டும் இரண்டாவது சுற்றுக்கு அழைப்பு வந்தால் பேச்சு வார்த்தை நடத்தப்படும்.
பேச்சு வார்த்தைக்கு பின்னரே இதுபற்றி பேச முடியும்.
மதிமுக தனிச்சின்னத்தில் தான் போட்டியிடும் என எங்கள் அவைத்தலைவர் சொல்லியுள்ளார்.
அதுதான் எங்களின் நிலைப்பாடு.
மோடி எத்தனை முறை காவடி தூக்கினாலும், பாஜக தமிழகத்தில் காலூன்ற முடியாது.
பாஜகவால் தமிழகத்தை ஏமாற்ற முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b