Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 பிப்ரவரி (ஹி.ச.)
குழந்தைகளின் நல்ல எதிர்காலத்துக்காக மோடி அரசு சமீபத்தில் என்பிஎஸ் வாத்சல்யா யோஜனா என்ற திட்டத்தை அறிமுகம் செய்தது.
இந்த திட்டம் நல்ல முதலீட்டு வாய்ப்புகளை தருகிறது. இப்போது ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் இந்த திட்டத்தில் ஒரு பெரிய மாற்றத்தைச் செய்துள்ளது.
அதாவது ஓய்வூதிய நிதிகள் அவர்களின் மொத்த பணத்தையும் பங்குகளில் முதலீடு செய்யலாம். இதனால் குழந்தைகள் நீண்ட காலத்துக்கு தங்கள் ஓய்வூதிய நிதியை வேகமாக வளர்க்க முடியும்.
பிப்ரவரி 23ஆம் தேதி வெளியான அறிக்கையின்படி, ஓய்வூதிய நிதிகள் இப்போது முதலீடு செய்வதில் அதிக சுதந்திரம் பெற்றுள்ளன.
முன்பு சொத்து ஒதுக்கீட்டில் சில கட்டுப்பாடுகள் இருந்தன. ஆனால் இப்போது நிதி மேலாளர்கள், விதிமுறைகளுக்கு உட்பட்டு முழு நிதியையும் பங்குகளில் முதலீடு செய்யலாம்.
என்பிஎஸ் வாத்சல்யா திட்டத்தின்படி, ஒவ்வொரு ஓய்வூதிய நிதியும் தங்களுக்கு விருப்பமான முதலீட்டு முறையைத் தேர்வு செய்யலாம். அவர்கள் ஒழுங்குமுறை ஆணையம் சொன்ன சொத்து ஒதுக்கீட்டை பின்பற்றலாம் அல்லது தங்கள் சொந்த முறையை உருவாக்கலாம். இதனால், ஒவ்வொரு நிதியின் செயல்பாடும், ஆபத்து விவரமும் மாறுபடலாம்.
புதிய விதிகளின்படி, மத்திய பதிவு முகமைகள் இப்போது ஓய்வூதிய நிதிகளுக்கு சில முக்கியமான தகவல்களை கொடுக்கும். அதாவது பெற்றோர், குழந்தையின் பாலினம், பணம் டெபாசிட் செய்யும் முறை, அவர்கள் எந்த மாநிலம் அல்லது பகுதியைச் சேர்ந்தவர்கள் போன்ற விவரங்கள் தரப்படும்.
இந்த தகவல்கள் மூலம் எந்தெந்த பகுதிகளில் அதிக முதலீடு நடக்கிறது, எந்த பிரிவினர் அதிகம் முதலீடு செய்கிறார்கள், யாருக்கு எந்த மாதிரியான தகவல் தேவை என்பதை ஓய்வூதிய நிதிகள் தெரிந்து கொள்ளலாம். இது அவர்களின் திட்டத்தை மேம்படுத்தவும், சரியான நபர்களுக்கு சரியான தகவலை கொடுக்கவும், அதிக குடும்பங்களை திட்டத்துடன் சேர்க்கவும் உதவும்.
இந்த மாற்றங்கள் திட்டத்தை இன்னும் சிறப்பானதாகவும், வெளிப்படையானதாகவும், நிலையானதாகவும் மாற்றும் நோக்கம் கொண்டது என்று ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. தகவல்களை வைத்து முடிவெடுப்பது நல்ல பலனைத் தருவதோடு, தேவைப்பட்டால் சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்கவும் உதவும்.
இந்த விதிகளை மீறும் ஓய்வூதிய நிதி அல்லது இடைத்தரகர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒழுங்குமுறை ஆணையம் எச்சரித்துள்ளது.
என்பிஎஸ் வாத்சல்யா யோஜனா திட்டம் என்பது 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான பெற்றோர்கள் நிர்வகிக்கும் ஓய்வூதியத் திட்டம்.
இதில் நீண்ட கால முதலீடு இருப்பதால், பங்குகளில் 100 சதவீதம் முதலீடு செய்வது அதிக வருமானம் கொடுக்கும். அதே நேரத்தில் சில ஆபத்துகளும் உள்ளன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
Hindusthan Samachar / JANAKI RAM