Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 பிப்ரவரி (ஹி.ச.)
சென்னை அடுத்த தாம்பரத்தில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
மாநில துணைப் பொதுச்செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான தாம்பரம் யாக்கூப் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, வடக்கு மாவட்ட தலைவர் ஜாஹிர் உசேன் வரவேற்புரை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.
மேலும், தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். ராஜா, விசிக மாநில துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு, மதிமுக மாவட்ட செயலாளர் மாவை மகேந்திரன், மண்டல குழுத் தலைவர்கள் காமராஜ், இந்திரன், தாம்பரம் ஜும்மா பள்ளி தலைவர் நாகூர்கனி, தலைமைக் கழக பேச்சாளர் சலீம்கான் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த ம.ம.க தலைவர் ஜவாஹிருல்லா, அரசியல் தொடர்பான பல்வேறு கருத்துகளை பகிர்ந்தார்.
அப்போது அவர் பேசியதாவது,
இரண்டு முறை முதலமைச்சராகவும், ஒருமுறை துணை முதலமைச்சராகவும் பதவி வகித்த ஓ. பன்னீர்செல்வம் திமுக கூட்டணியில் இணைந்திருப்பது வரவேற்கத்தக்கது.
வலுவான திமுக கூட்டணி வரும் தேர்தலில் வெற்றி பெற்று, திராவிட மாடல் 2.0 ஆட்சி மீண்டும் அமைவது உறுதி என்றார்.
மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளாக, அதிமுக ஆட்சி காலத்திலும் மத்திய பாஜக அரசு தமிழ்நாட்டுக்கு எதிரான போக்கை கடைப்பிடித்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
கல்வியில் முன்னணி மாநிலமாக உள்ள தமிழ்நாட்டுக்கு, கல்வி அனைவருக்கும் சென்றடைய தேவையான நிதியை மத்திய அரசு வழங்க மறுப்பதாகவும் தெரிவித்தார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தாலும் இந்த நிலையை கண்டித்திருப்பார் என்றும் அவர் கூறினார்.
இத்தகைய சூழ்நிலையில்தான் ஓ. பன்னீர்செல்வம் திமுக கூட்டணியில் இணைந்திருப்பது முக்கியமான அரசியல் முன்னேற்றமாகும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு பயணத்தையும் அவர் விமர்சித்தார்.
மத நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற இந்த இஃப்தார் நிகழ்ச்சியில், பொதுமக்கள், சமூக அமைப்பினர் மற்றும் கட்சித் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / P YUVARAJ