Enter your Email Address to subscribe to our newsletters

நாகப்பட்டினம், 28 பிப்ரவரி (ஹி.ச.)
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வேதாரண்யேஸ்வரர் கோயில் மாசி மகப் பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டத் திருவிழா நடைபெற்றது.
சப்த விடங்க தலங்களில் ஒன்றான வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோயிலில் ரிக், யஜூர், சாம, அதர்வண ஆகிய நான்கு வேதங்கள் வழிபட்டதாக கூறப்படுவதும், மூடப்பட்டிருந்த கோயில் கதவை சமயக் குரவர்களான திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் ஆகியோர் தேவாரத் தமிழ்ப் பதிகம் பாடி திறந்ததும் சிறப்புக்குரியது.
அகஸ்திய முனிவருக்கு இறைவன் திருமணக் கோலத்தில் காட்சிக் கொடுத்த தலமாகவும், 64 சக்தி பீடங்களில் ஒன்றான சுந்தரி பீடம் அமையப் பெற்ற கோயிலாகவும் இந்த தலம் திகழ்கிறது.
இவ்வாறான பெருமைகள் கொண்ட வேதாரண்யேஸ்வரர் கோயிலில் நிகழாண்டு மாசிமகப் பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான ரத்ன சிம்மாசன ஹம்ச நடன புவனி விடங்க தியாகராஜசுவாமி எழுந்தருளும் தேரோட்டம் இன்று காலையில் தொடங்கியது. இத்தேரோட்டத் திருவிழாவில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.
பாரம்பரிய முறைப்படி தப்பு, தாரை, கொம்பு முழங்க நாதஸ்வர இசையுடன் திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. பின்னால், அம்பாள் எழுந்தருளிய சப்பரத்தைப் பெண்களிடம் சிறுவர்களும் இழுத்துச் செல்கின்றனர்.
Hindusthan Samachar / vidya.b