ஆப்கானிஸ்தான் வான்வெளி தாக்குதல் நடத்தியதால் பாகிஸ்தான் நாடு முழுவதும் டிரோன்கள் பறக்க தடை
காபூல், 28 பிப்ரவரி (ஹி.ச.) பாகிஸ்தானின் பக்கத்து நாடான ஆப்கானிஸ்தானை தலிபான்கள் ஆண்டு வருகின்றனர். பாகிஸ்தானில் இருக்கும் விமான நிலையங்கள், மசூதிகள், ராணுவ தளங்கள், காவல் நிலையங்கள் போன்ற இடங்களில் தலிபானின் ஒரு பிரிவான தெஹ்ரிக்-இ-தலிபான் அமைப்ப
ஆப்கானிஸ்தான் வான்வெளி தாக்குதல் நடத்தியதால் பாகிஸ்தான் நாடு முழுவதும் டிரோன்கள் பறக்க தடை


காபூல், 28 பிப்ரவரி (ஹி.ச.)

பாகிஸ்தானின் பக்கத்து நாடான ஆப்கானிஸ்தானை தலிபான்கள் ஆண்டு வருகின்றனர்.

பாகிஸ்தானில் இருக்கும் விமான நிலையங்கள், மசூதிகள், ராணுவ தளங்கள், காவல் நிலையங்கள் போன்ற இடங்களில் தலிபானின் ஒரு பிரிவான தெஹ்ரிக்-இ-தலிபான் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதாக பாகிஸ்தான் அரசு குற்றம் சாட்டியுள்ளது.

இதையடுத்து, ஆப்கானிஸ்தான் எல்லையருகே தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக சொல்லப்படும் இடங்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியது.

இதனால் ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் அதிகமானது. கடந்த வாரம் ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து பாகிஸ்தான் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது.

இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 70-க்கும் மேற்பட்டோர் இறந்தனர். இதற்கு பதிலடியாக ஆப்கானிஸ்தான் ராணுவம் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் 55 பேர் இறந்ததாகவும், 12-க்கும் மேற்பட்ட ராணுவ முகாம்களை கைப்பற்றியதாகவும் ஆப்கானிஸ்தான் அரசு கூறியுள்ளது.

மேலும், இறந்த 23 பேரின் உடல்கள் தங்கள் வசம் இருப்பதாகவும் ஆப்கானிஸ்தான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாகித் தெரிவித்துள்ளார்.

ஆனால் பாகிஸ்தான் இதை மறுத்துள்ளது.

தங்கள் தரப்பில் 2 வீரர்கள் மட்டுமே இறந்ததாகவும், பதிலடித் தாக்குதலில் 133 ஆப்கானிஸ்தான் வீரர்கள் இறந்ததாகவும் கூறியுள்ளது.

இரண்டு நாடுகளுக்கும் இடையே உள்ள 2 ஆயிரத்து 611 கி.மீ நீளமுள்ள 'டியூரண்ட் லைன்' எல்லையை ஆப்கானிஸ்தான் இன்னும் அங்கீகரிக்கவில்லை.

மேலும், பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தான் அடைக்கலம் கொடுப்பதாகவும், ஆப்கானிஸ்தான் சுதந்திரத்தில் பாகிஸ்தான் தலையிடுவதாகவும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றன.

இதற்கிடையில், இரு நாடுகளுக்கும் இடையே கத்தாரில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், போர் மூளும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில், எல்லையில் மோதல்கள் அதிகமானதால், நாடு முழுவதும் அனைத்து டிரோன் பயன்பாடுகளுக்கும் பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது.

நாடு முழுவதும் வணிக மற்றும் தனிப்பட்ட பயன்பாட்டு டிரோன்களுக்கு தடை விதித்து உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.

இதற்கிடையே ஆப்கானிஸ்தான் மீது வெளிப்படையாக போர் தொடுப்பதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM