பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு நாளை மதுரையில் போக்குவரத்து மாற்றம்
மதுரை, 28 பிப்ரவரி (ஹி.ச) தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு சிறப்பு விமானம் மூலம் சென்னை வருகிறார். இன்று இரவு ஆளுநர் மாளிகையில் தங்கும் பிரதமர் மோடி, நாளை காலை புதுச்சேரி செல்கிறா
Traffic changes in Madurai


மதுரை, 28 பிப்ரவரி (ஹி.ச)

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு சிறப்பு விமானம் மூலம் சென்னை வருகிறார்.

இன்று இரவு ஆளுநர் மாளிகையில் தங்கும் பிரதமர் மோடி, நாளை காலை புதுச்சேரி செல்கிறார்.

அதன்பிறகு அங்கிருந்து தஞ்சை வழியாக மதுரை செல்கிறார். மதுரையில் நாளை திருப்பரங்குன்றம் கோயிலுக்கு செல்கிறார். பின்னர் மாலையில் மதுரையில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.

பிரதமரின் வருகையை முன்னிட்டு மதுரையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும், போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன.

மதுரை விமான நிலையத்தில் இருந்து பிரதமர் மோடி பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்குச் செல்லும் வழித்தடங்கள் அனைத்தும் காவல்துறையின் முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

குறிப்பாக, அருப்புக்கோட்டை ரிங் ரோடு சந்திப்பு முதல் விரகனூர் ரவுண்டானா வரை மற்றும் பெருங்குடி சந்திப்பு முதல் அவனியாபுரம் பைபாஸ் சாலை வரை எந்தவித வாகனங்களையும்

நிறுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாளை காலை 6 மணி முதல் இரவு வரை நகருக்குள் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, கனரக வாகனங்களுக்குப் புதிய வழித்தடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

திருச்சியிலிருந்து மேலூர் வழியாக தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி செல்லும் வாகனங்கள், மேலூர் நான்கு வழிச்சாலையில் இருந்து அழகர்கோவில், சத்திரப்பட்டி, அலங்காநல்லூர் வழியாகத் தனிச்சியம் சென்று, அங்கிருந்து சமயநல்லூர் வழியாகக் கப்பலூரை அடைய வேண்டும்.

கன்னியாகுமரி மற்றும் விருதுநகரில் இருந்து வரும் வாகனங்கள், திருமங்கலம் மற்றும் கப்பலூர் சந்திப்பில் இருந்து நாகமலைப்புதுக்கோட்டை, சமயநல்லூர் வழியாக அதே அழகர்கோவில் வழித்தடத்தைப் பயன்படுத்தி மேலூரைச் சென்றடையலாம்.

தூத்துக்குடி மற்றும் அருப்புக்கோட்டையிலிருந்து வருபவர்கள் விருதுநகர், கள்ளிக்குடி வழியாகத் திருமங்கலம் சென்று அங்கிருந்து மேற்குறிப்பிட்ட மாற்றுப் பாதையைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்குச் செல்லும் வாகனங்களுக்கான மாற்றங்கள் பின்வருமாறு:

திருச்சியிலிருந்து வருபவர்கள் மேலூர் - பூவந்தி - திருப்புவனம் வழியாகச் செல்லலாம்.

தூத்துக்குடியிலிருந்து ராமநாதபுரம் செல்வோருக்குத் திருச்சுழி, நரிக்குடி, திருப்புவனம் வழித்தடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து சிவகங்கை, ராமநாதபுரம் செல்லும் வாகனங்கள் நாகமலைப்புதுக்கோட்டை மற்றும் தனிச்சியம் பிரிவு வழியாகச் சுற்றிச் செல்ல வேண்டும்.

பிரதமரின் வருகையை முன்னிட்டு நாளை மதுரை மாநகரே விழாக்கோலம் பூண்டுள்ள நிலையில், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும், நேர விரயத்தைத் தடுக்கவும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் காவல்துறை அறிவித்துள்ள இந்த மாற்று வழித்தடங்களைப் பின்பற்றி ஒத்துழைப்பு நல்குமாறு போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டுமதுரையில் நாளை மார்ச் 1-ம் தேதி டிரோன்கள் பறக்கத் தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தடையையும் மீறி டிரோன்கள் பறக்க விடும் நபர்கள் மீது சட்டப்படு நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / vidya.b