Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 28 பிப்ரவரி (ஹி.ச)
தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர். நரேந்திர மோடி நாளை (மார்ச் 1) மதுரைக்கு வருகை தர உள்ளார்.
மதுரை வருகையின் ஒரு பகுதியாக, பிரதமர் மோடி புகழ்பெற்ற திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளார்.
மேலும், மதுரை விமான நிலையத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று பல்வேறு புதிய திட்டங்களைத் தொடங்கி வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி தமிழகம் வரும் அதே வேளையில் பாஜகவின் தேர்தல் மேலிடப்பொறுப்பாளர் பியூஸ் கோயலும் இன்று மதுரை வருகை தந்துள்ளார்.
இன்று மதுரையில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கவிருக்கும் அவருக்கு அதிமுக தலைமை நிலையச் செயலாளர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிமுக மற்றும் பாஜக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மதுரை வந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நிருபர்களிடம் கூறியதாவது:
ஊழல் திமுக ஆட்சியை அகற்றுவோம். ஜெயலலிதாவின் முதுகில் ஓ.பன்னீர்செல்வம் குத்திவிட்டார்.
தமிழக மக்கள் ஓ.பன்னீர்செல்வத்தை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.
தமிழர்களின் கலாசாரம், பாரம்பரியம், இறையாண்மையை திமுக அரசு கெடுத்து விட்டது.
திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றாதது அவமானம். அதிமுக- பாஜ கூட்டணி குடும்பம் போல் உள்ளது.
தமிழகத்தில் மீண்டும் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சி அமையும். தேஜ கூட்டணியை மக்கள் வெற்றி பெற செய்வார்கள்.
இவ்வாறு பியூஷ் கோயல் கூறினார்.
பியூஷ் கோயலுடன் பாஜக-அதிமுக இடையான தொகுதிப் பங்கீடு குறித்து பேச இருப்பதாக கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து அக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகள், குறிப்பாக டிடிவி தினகரனின் அமமுக, அன்புமணியின் பாமக உள்ள கட்சிகள் தொகுதிப் பங்கீடு குறித்து பியூஸ் கோயலிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Hindusthan Samachar / vidya.b