காங்கிரஸுக்கு 1 மாநிலங்களவை இடம் தருவதாக முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார் - செல்வப்பெருந்தகை
சென்னை, 28 பிப்ரவரி (ஹி.ச.) தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் இன்று திமுக, கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்
காங்கிரஸுக்கு 1 மாநிலங்களவை இடம் தருவதாக முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார் - செல்வப்பெருந்தகை


சென்னை, 28 பிப்ரவரி (ஹி.ச.)

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் இன்று திமுக, கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்திற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் , காங்கிரஸ் தமிழ்நாடு மாநில தலைவர் செல்வப் பெருந்தகை, காங்கிரஸ் மாநில தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் ஆகியோர் இன்று வருகை தந்தனர்.

முதலாவதாக காங்கிரஸ் கட்சியுடன் திமுகவின் பேச்சுவார்த்தை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

அதன்படி பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த செல்வப்பெருந்தகை, கிரிஷ் சோடங்கர் ஆகியோர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

செய்தியாளர் சந்திப்பில் செல்வப்பெருந்தகை கூறியதாவது,

திமுகவுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை சுமுகமாகவும், வெற்றிகரமாகவும் செல்கிறது. எங்களுக்கு என்ன தேவையோ அதனை கேட்டுள்ளோம்.

அவர்களும் அதனை பரிசீலிப்பதாக சொல்லியுள்ளனர். காங்கிரஸுக்கு ஒரு ராஜ்யசபா இடம் தருவதாக முதல்வர் கூறியுள்ளார்.

எங்கள் கூட்டணி கொள்கை ரீதியான, இயற்கையான, உறுதியான, மதவாதத்துக்கு எதிரான கூட்டணி. இதனை சிதைக்க யாரும் முயற்சி செய்ய வேண்டாம். எங்கள் கூட்டணி தமிழ் மண்ணை காக்கும் கூட்டணி. ஒருபோதும் பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் இடமில்லை.

ராகுல் காந்தி தமிழகத்தின் மீது பற்று வைத்துள்ளார். மதவாத சக்திகள் தமிழகத்தில் நுழைய நாங்கள் விடமாட்டோம். தவெகவுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்துவதாக கிரிஷ் சோடங்கர் சொல்லவில்லை.

தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாக வெளியான தகவல் வதந்தி. கிரிஷ் சோடங்கர் சொல்லாத கருத்தை, அவர் சொன்னதாக கூறுவது கண்டிக்கத்தக்கது. எங்கள் உயர் தலைமை திமுகவுடன் கூட்டணி நடத்தவே கூறியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர்,

திமுகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாகவும், நம்பிக்கையுடனும் நடக்கிறது. எங்களுக்கு தேவையான தொகுதிகள் குறித்து கேட்டுள்ளோம். எங்களின் விருப்ப பட்டியலை திமுகவிடம் கொடுத்துள்ளோம்.

கடந்த முறையை விட அதிக தொகுதிகளை கேட்டுள்ளோம். ஆட்சியில் பங்கு குறித்தும் திமுக குழுவிடம் பேசியுள்ளோம்.

இது குறித்து இரு நாட்களில் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்த வாய்ப்புள்ளது.

என்று கூறினார்.

Hindusthan Samachar / vidya.b