Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 01 மார்ச் (ஹி.ச.)
அமெரிக்க - ஈரான் போர் பதட்டம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு இயக்கப்படும் 33 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படைகள் நேற்று திடீரென தாக்குதல் நடத்த தொடங்கிய நிலையில், அதற்கு ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது. இதன் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
மேலும், போர் காரணமாக ஈரான் உள்ளிட்ட சில நாடுகள் தங்களுடைய வான்வழிப் பகுதிகளை மூடிவிட்டது. இதனால் மத்திய கிழக்கு பகுதிகளில் விமான சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று துபாய், அபுதாபி, பஹ்ரைன், மஸ்கட், இயக்கப்படும் 16 வருகை விமானங்களும், அதைப்போல் புறப்பாடு விமானங்கள் 12 என மொத்தம் 28 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
அதேபோல இரண்டாவது நாளாக இன்றும் வளைகுடா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக, சென்னையில் இருந்து துபாய், அபுதாபி, சார்ஜா, பக்ரைன், குவைத், மஸ்கட் உள்ளிட்ட 17 புறப்பாடு விமானங்கள், அதைப்போல் இந்த நாடுகளில் இருந்து சென்னைக்கு வரவேண்டிய 16 வருகை விமானங்கள் எந மொத்தம் 33 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும் இந்த விமானங்கள் ரத்துகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதேபோல லண்டன், அமெரிக்கா, ஜெர்மன் உள்ளிட்ட நாடுகளில் இருந்து சென்னை வரும் பல்வேறு விமானங்கள், ஈரான், மத்திய கிழக்கு நாடுகளின் வான் வொளிகளை கடந்து வரவேண்டிய நிலையில் உள்ளது. ஈரான் உள்ளிட்ட நாடுகளின் வான்வெளிகள் மூடப்பட்டுள்ளதால், மாற்றுப் பாதைகளில் சுற்றி வருவதால் அந்த விமானங்கள் சென்னைக்கு வந்து விட்டு மீண்டும் புறப்பட்டு செல்வதற்கு பல மணி நேரம் தாமதம் ஆகலாம் என்பதால், அந்த விமானங்கல் ரத்தாகவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
எனவே, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்ய இருக்கும் பயணிகள் அந்தந்த விமான நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு அனைத்து தகவலையும் கேட்ட பின்னர் தங்களின் பயணத் திட்டங்களை வகுத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
முன்னதாக, மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், பரபரப்பாக இயங்கும் சென்னை விமான நிலையம் இன்று கூட்டமின்றி வெறிச்சோடிய நிலையில் காணப்படுகிறது.
Hindusthan Samachar / ANANDHAN