மதுரையில் நடைபெறவுள்ள NDA பரப்புரை கூட்டத்தில் தந்தை பெரியார் படத்தை அகற்றியது தமிழர்களை அவமதிக்கும் செயல் - நாஞ்சில் சம்பத் கண்டனம்
சென்னை, 01 மார்ச் (ஹி.ச.) மதுரையில் இன்று பிரதமர் மோடி கலந்துகொள்ளும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பரப்புரை பொதுக்கூட்டத்தின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த தந்தை பெரியாரின் புகைப்படத்தை நீக்கியதை கண்டித்து தமிழக வெற்றி கழகத்தின் மூத்த நிர்வாகி நாஞ்சில்
Nanjil


Hs


சென்னை, 01 மார்ச் (ஹி.ச.)

மதுரையில் இன்று பிரதமர் மோடி கலந்துகொள்ளும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பரப்புரை பொதுக்கூட்டத்தின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த தந்தை பெரியாரின் புகைப்படத்தை நீக்கியதை கண்டித்து தமிழக வெற்றி கழகத்தின் மூத்த நிர்வாகி நாஞ்சில் சம்பத் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

மதுரை மண்டேலா நகர் பகுதியில் இன்று நடைபெறவுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்திற்காக அமைக்கப்பட்டிருந்த அலங்கார முகப்பில், பகுத்தறிவின் அடையாளமான, எங்கள் கொள்கைத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் புகைப்படம் முதலில் வைக்கப்பட்டு, பின்னர் அவசரகதியுடன் அகற்றப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது.

தமிழக அரசியலில் சமூக நீதி, பகுத்தறிவு மற்றும் சமத்துவத்திற்கான அடித்தளமிட்டவர் தந்தை பெரியார். திராவிட மண் என்று அழைக்கப்படும் இந்த மண்ணில், அவர் காட்டிய பாதையில்தான் அனைத்து அரசியல் இயக்கங்களும் பயணிக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு தலைவரின் படத்தை வைத்துவிட்டு, பின்னர் யாரையோ திருப்திப்படுத்துவதற்காக அதனை நீக்கியிருப்பது, தமிழக மக்களின் உணர்வுகளையும், இந்த மண்ணின் அடையாளத்தையும் கொச்சைப்படுத்தும் செயலாகும்.

கொள்கை வேறுபாடுகள் ஆயிரம் இருந்தாலும், தமிழகத்தின் சமூக மாற்றத்திற்கு வித்திட்ட தலைவர்களை மதிக்கத் தெரியாத அரசியல் போக்கு கண்டிக்கத்தக்கது. கூட்டணி தர்மத்திற்காகவோ அல்லது மேலிடத்து உத்தரவிற்காகவோ சுயமரியாதைச் சுடரொளியான பெரியார் அவர்களின் படத்தை அகற்றியது, அந்த கூட்டணியின் கொள்கை முரண்பாட்டையும், அடிமைத்தனத்தையுமே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

பெரியார் என்பவர் வெறும் புகைப்படம் அல்ல.

அவர் இந்த மண்ணின் சமூக நீதிக் கோட்பாடு. பெரியார் கிழவன் அல்ல; அவர் எங்கள் கிழக்கு திசை. எங்களின் கொள்கைத் தலைவர். அவரைச் சிறுமைப்படுத்துவதாக நினைத்து, தங்களது அரசியல் அஞ்ஞானத்தையே அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

தமிழகத்தின் அடையாளங்களைச் சிதைக்கும் இத்தகைய போக்குகளைத் தமிழகம் ஒருபோதும் அனுமதிக்காது.

மண்ணின் தலைவர்களை மதிக்கத் தவறும் எவருக்கும் தமிழக மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ