Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 01 மார்ச் (ஹி.ச.)
தமிழக அரசு பாடத் திட்டத்தின் கீழ் 2025-2026 கல்வியாண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு நாளை
(மார்ச் 2-ஆம் தேதி) முதல் மார்ச் 26-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்தத் தேர்வை பள்ளி மாணவர்கள் 7 லட்சத்து 99,692 போ், தனித் தேர்வர்கள் 27,783 பேர் என மொத்தம் 8 லட்சத்து 27,475 பேர் எழுதவுள்ளனர்.
பிளஸ் 2 வகுப்பில் 7,465 மாணவர்கள் ‘ஸ்கிரைப்’ உதவியுடன் தேர்வெழுதவுள்ளனர். பொதுத் தேர்வெழுத 281 சிறைவாசிகள் பதிவு செய்துள்ளனர்.
இதற்காக 3,412 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வுப் பணியில் தினமும் 49,000-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் ஈடுபடுத்தப்படுவர்.
பொதுத் தேர்வு முறைகேடுகளைத் தடுக்க சுமாா் 4, 900-க்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
நிகழாண்டு மேல்நிலைத் தேர்வில் இயற்பியல், வேதியியல், கணிதம், வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் பாடங்களில் தேர்வெழுதும் தேர்வா்களுக்கு, பெரிய எழுத்துக்களில் ஏ4”அளவிலான மடக்கைப் புத்தகங்கள் (லாகரிதம்) 20,000 எண்ணிக்கையில் வழங்கப்படவுள்ளது. இவ்வாண்டுமுதல் கணக்குப் பதிவியல் பாடத்துக்கு தேர்வா்கள் நிரலாக்க வசதியற்ற சாதாரண கால்குலேட்டா் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு இருக்கை வசதி, சொல்வதை எழுதுபவர் நியமனம் (ஸ்கிரைப்), கூடுதல் நேரச் சலுகை வழங்குதல் போன்றவற்றில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
பிளஸ் 2 பொதுத் தேர்வின் முதல் நாளான நாளை தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெறவுள்ளன.
Hindusthan Samachar / vidya.b