டி20 உலகக்கோப்பை - இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
கொழும்பு, 01 மார்ச் (ஹி.ச.) டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள பல நகரங்களில் நடந்து வருகிறது. தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடந்து கொண்டு இருக்கின்றன. இதுவரை தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள
டி20 உலகக்கோப்பை - இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி


கொழும்பு, 01 மார்ச் (ஹி.ச.)

டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள பல நகரங்களில் நடந்து வருகிறது. தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடந்து கொண்டு இருக்கின்றன. இதுவரை தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

இந்நிலையில், நேற்று நடந்த முக்கியமான போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது.

முதலில் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய பர்ஹானும், பகார் ஜமானும் அதிரடியாக விளையாடினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 176 ரன்கள் சேர்த்தது. பகார் ஜமான் 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பர்கான் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் குறைந்த ரன்னில் ஆட்டமிழந்தனர்.

இறுதியில் பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியின் சார்பில் மதுஷன்கா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையடுத்து 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணியின் சார்பில் பதும் நிசாங்கா மற்றும் கமில் மிசாரா ஆகியோர் களமிறங்கினர்.

இதில் நிசாங்கா 3 ரன்களும், மிசாரா 26 ரன்களும், அடுத்து களமிறங்கிய அசலங்கா 25 ரன்களும், கமிந்து மெண்டீஸ் 3 ரன்களும், லியானேஜ் 5 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

ஒரு பக்கம் ரத்நாயகே சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். அவருடன் கேப்டன் தசுன் சனகா அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்டார். இந்த ஜோடியில் ரத்நாயகே 58 (37) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார்.

முடிவில் அதிரடியாக விளையாடிய கேப்டன் தசுன் ஷனகா 76 (31) ரன்களும், வெல்லாலகே 2 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இறுதியில் இலங்கை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணியின் சார்பில் அப்ரார் அகமது அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்மூலம் பாகிஸ்தான் அணி இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றும், அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பை இழந்து வெளியேறியது.

முன்னதாக பாகிஸ்தான் அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தும் பட்சத்தில், ரன்ரேட் அடிப்படையில் நியூசிலாந்தை பின்னுக்கு தள்ளி பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறும் என்று சொல்லப்பட்டிருந்தது.

இந்நிலையில் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் தற்போது தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

Hindusthan Samachar / JANAKI RAM