Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 01 மார்ச் (ஹி.ச.)
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே விவசாய நிலத்திற்கு இலவச மின் இணைப்பு வழங்க ரூ.3,000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய இளநிலைப் பொறியாளரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர்.
துறையூர் அருகே உள்ள கோம்பை கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து. விவசாயியான இவர், தனது நிலத்திற்கு இலவச மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்திருந்தார்.
இதற்காக தாட்கோ மூலம் நிதியும் ஒதுக்கப்பட்டிருந்தது. இருப்பினும், மின் இணைப்பு வழங்க கால தாமதமானதால், கடந்த 27-ம் தேதி செங்காட்டுப்பட்டி மின்வாரிய அலுவலகத்திற்குச் சென்ற முத்து, அங்கு இளநிலைப் பொறியாளராகப் பணியாற்றும் ராஜு என்பவரைச் சந்தித்து இது குறித்துக் கேட்டுள்ளார்.
அப்போது, மின் இணைப்பு உடனடியாக வழங்க வேண்டுமானால் ரூ.3,000 லஞ்சமாகக் கொடுக்க வேண்டும் என ராஜு தெரிவித்துள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத முத்து, இது குறித்து திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல்துறையில் புகார் அளித்தார். முத்துவின் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த லஞ்ச ஒழிப்புப் பிரிவு டி.எஸ்.பி மணிகண்டன் தலைமையிலான போலீசார், ரசாயனம் தடவிய மூவாயிரம் ரூபாயை முத்துவிடம் கொடுத்து அனுப்பினர்.
துறையூர் மின் அலுவலகத்தில் வைத்து அந்தப் பணத்தை இளநிலைப் பொறியாளர் ராஜு பெற்றபோது, அங்கிருந்த டி.எஸ்.பி மணிகண்டன், ஆய்வாளர் சக்திவேல் மற்றும் போலீசார் அவரை கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர்.
தொடர்ந்து மின்வாரிய அலுவலகத்தில் போலீசார் தீவிர சோதனை நடத்தி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி மாவட்டத்தில் லஞ்சம் வாங்கிய புகாரில் மின்வாரிய இளநிலைப் பொறியாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் அரசு அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN