Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 மார்ச் (ஹி.ச.)
மானாமதுரை ஆகாஷ் மரணம் தொடர்பாக இயக்குநர் பா.ரஞ்சித் தனது கண்டனத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில்,மானாமதுரை பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ஆகாஷ் (26) கடந்த (06.03.2026) அன்று காவல்துறையினரால் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
கொலை நடந்து மூன்று நாட்கள் ஆகியும் இப்போது வரை சம்மந்தப்பட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருக்கிறது அரசும் காவல்துறையும்.
4 ஆண்டுகளில் 24 காவல்துறை மரணம் என்பது சாதாரணமாக கடந்துபோகக் கூடிய ஒன்றல்ல என மதுரை உயர்நீதிமன்றம் கண்டித்திருந்தது. அதற்குப்பின் இரண்டு பேர் கொல்லப்பட்டு இருக்கிறார்கள், தற்போது ஆகாஷ் என்கிற இளைஞன்.
மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு மோசமான நிலையிலிருக்கிறது, அதில் பட்டியலின மக்கள் சம்மந்தப்பட்ட விவகாரங்களில் அவை இன்னும் அலட்சியமாக கையாளப்படுகின்றன.
காவல்துறைக்கும் ஆட்சியாளர்களுக்கும் பட்டியலின மக்கள் மீது எந்தவித அக்கறையும் இல்லையென்பதாகவே இதை புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.
திருநெல்வேலி, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென்மாவட்ட பகுதிகளில் பட்டியலின மக்களுக்கு எதிரான சாதிய வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
காவல் துறையினர் உரிய நடவடிக்கையோ பாதுகாப்போ அளிப்பார்கள் என்கிற நம்பிக்கையை பட்டியலின மக்கள் இழந்து வருகிறார்கள்.
சமூக இயக்கங்களும் மனித உரிமைச் செயற்பாட்டார்களும் நீதிமன்றங்களும் தொடந்து இதனை கவனப்படுத்தி வருகிற போதிலும் திமுக அரசு இவற்றை கட்டுப்படுத்துவதற்கு எந்த முனைப்பும் இல்லாமல் இருக்கிறது.
ஒவ்வொரு குடிமகனுக்கும் சமூக மற்றும் அரசியல் பாதுகாப்பை உறுதி செய்யும் அடிப்படை உரிமைக்காகவே வாக்குரிமை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த வக்கரசியல் காரணங்களுக்காக கூட பட்டியலின மக்களின் பிரச்சனைகளுக்கு செவி கொடுக்க மறுக்கிறது தமிழக அரசு. எல்லா அதிகார மட்டத்திலும் கைவிடப்பட்டவர்களாகவே பட்டியலின மக்களின் சமூக நிலை இருக்கிறது.
'அரசியலில் நாம் ‘ஒரு மனிதன் – ஒரு ஓட்டு – ஒரு மதிப்பு’ என்ற சமத்துவத்தை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் சமூகமும் பொருளாதாரமும் சமத்துவமற்றதாகவே இருந்தால், இந்த முரண்பாடு நீண்ட காலம் நிலைக்காது' என வலியுறுத்தியவர் பாபாசாகேப் அம்பேத்கர்.
இன்று பட்டியலின மக்களின் உயிர் பாதுகாப்பே உறுதி செய்யப்படாத நிலையில், அந்த எச்சரிக்கை இன்னும் தீவிரமான அரசியல் கேள்வியாக மாறியுள்ளது.
ஆகாஷ் கொலை வழக்கில் உடனடி நடவடிக்கை எடுத்து, நீதியை உறுதி செய்ய தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும். எந்த மக்களின் பிரச்சனைகளை பேச பிரதிநித்துவப்படுத்தப்பட்டார்களோ அந்த பிரச்சனையை பேசாத பட்டியலின பிரதிநிதிகள் கேள்விக்குள்ளாக்க வேண்டும்.
பட்டியலின மக்கள் தம் உரிமைகளை வென்றெடுக்க முன்னெப்போதையும் விட அணியமாக வேண்டிய தேவையும் இருக்கிறது, அதுவே இந்நிலையை மாற்றும் என்று தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN