சிலிண்டர் தட்டுப்பாடு - கோவை ஓட்டல்களில் உணவு வகைகள் குறைப்பு
கோவை, 10 மார்ச் (ஹி.ச.) கோவை மாவட்டத்தில் வணிக பயன்பாட்டிற்கான எல்பிஜி சிலிண்டர் விநியோகம் குறைக்கப்பட்டுள்ளதால் உணவகங்கள் மற்றும் பேக்கரிகளுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் வீட்டு உபயோகத்திற்கான எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்
Coimbatore


கோவை, 10 மார்ச் (ஹி.ச.)

கோவை மாவட்டத்தில் வணிக பயன்பாட்டிற்கான எல்பிஜி சிலிண்டர் விநியோகம் குறைக்கப்பட்டுள்ளதால் உணவகங்கள் மற்றும் பேக்கரிகளுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் வீட்டு உபயோகத்திற்கான எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு இல்லை என அதிகாரிகள் தெரிவித்தாலும், பொதுமக்கள் இடையே ஏற்பட்டுள்ள அச்சம் காரணமாக சிலிண்டர் முன்பதிவு செய்யும் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதன் தாக்கம் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விநியோகத்தில் அதிகமாக காணப்படுவதாக உணவக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்கள் போதுமான அளவில் கிடைக்காததால் கோவையில் பல உணவகங்கள் தங்களது உணவு பட்டியலை குறைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

கோவையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் வழக்கமாக 350 வகையான உணவுப் பொருட்கள் தயாரித்து விற்பனை செய்து வந்த நிலையில் தற்போது சுமார் 100 வகையான உணவுகள் மட்டுமே விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஆணியன் ஊத்தாப்பம், ரவா ரோஸ்ட், பஜ்ஜி, போண்டா, புரோட்டா போன்ற உணவுகள் தயாரிப்பது நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது சாதாரண தோசை வகைகள் போன்ற குறைந்த எரிவாயு பயன்படுத்தும் உணவுகள் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன.

மேலும் காலிபிளவர் ரோஸ்ட், தந்தூரி போன்ற அதிக அளவு எரிவாயு பயன்படுத்தும் உணவுப் பொருட்களின் விற்பனையும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்கள் தட்டுப்பாடு தொடர்ந்து நீடித்தால் உணவகங்கள் மற்றும் பேக்கரிகளுக்கு வரும் நாட்களில் நெருக்கடி மேலும் அதிகரிக்கும் என்று உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / ANANDHAN