Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 மார்ச் (ஹி.ச.)
தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை (11.3.2026) முதல் ஏப்ரல் 6 ந் தேதி வரையில் நடைபெறும் பொதுத் தேர்வினை 12 ஆயிரத்து 467 பள்ளிகளில் படித்த 8 லட்சத்து 82 ஆயிரத்து 806 மாணவர்களும், தனித்தேர்வர்கள் 26 ஆயிரத்து 196 பேர் என 9 லட்சத்து 9 ஆயிரத்து 2 பேர் எழுத உள்ளனர்.
4219 பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் தேர்வினை எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை 395 சிறைவாசிகளும் தேர்வெழுதவுள்ளனர். பத்தாம் வகுப்பு தேர்வில் செல்வதை எழுதுபவர்கள் 12,292 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான தேர்வுகள் காலை 10 மணிக்கு துவங்கி மதியம் 1 மணி 15 நிமிடம் வரையில் நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு கேள்வித்தாள் கொடுக்கப்பட்டு, 10 மணி 10 நிமிடம் வரையில் படிப்பதற்கு அனுமதிக்கப்படும். அதன் பின்னர் காலை 10 மணி 10 நிமிடத்திற்கு விடைத்தாள் கொடுக்கப்பட்டு,தேர்வர்கள் விபரங்களை சாிபார்த்து கையெழுத்து போட வேண்டும். காலை 10 மணி 15 நிமிடம் முதல் மதியம் 1 மணி 15 நிமிடம் வரையில் தேர்வு நடைபெறும்.
இத்தேர்வுப் பணியில் ஒவ்வொரு தேர்வு நாளன்றும் சுமார் 49,542 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும், தேர்வு முறைகேடுகளை தடுக்க சுமார் 4954 க்கும் மேற்பட்ட பறக்கும் படையினர் தேர்வுப்பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
நடப்பாண்டு முதல் தேர்வுக்கு வருகைப் புரிந்த மாணவர்களுக்கு கேள்வித்தாள் வழங்கிய பின்னர் ஒவ்வொரு தேர்வு அறையிலும் மீதமுள்ள கேள்வித்தாள்களை தேர்வறைக் கண்காணிப்பாளர்களே மாணவர்கள் முன்னிலையில் கவரில் போட்டு சீல் வைக்கும் முறை நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதனால் கேள்வித்தாள் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்படும்.
மேலும் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மாவட்டத்தேர்வுக்குழு அமைக்கப்பட்டு தேர்வினை பாதுகாப்பாக நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மின்சாரத்துறைக்கு தடைஇல்லாமல் மின்சாரம் வழங்கவும்,காவல்துறையினர் பாதுகாப்பு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேர்வு மையங்களில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு நேரடி தனித் தேர்வர்கள் இருப்பிட முகவரி உறுதி செய்யவும், சார்ந்த மாவட்டங்களில் விண்ணப்பித்தலை உறுதி செய்யவும் ஆதார் அட்டை சரிபார்க்கப்பட்டு விவரங்கள் பதிவேற்றம் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வுகள் தொடர்பாக மாணவர்கள், தேர்வர்கள் பொதுமக்கள் தேர்வுகள் தொடர்பான புகார்கள், கருத்துக்கள் மற்றும் சந்தேகங்களை அனைத்து தேர்வு நாட்களிலும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை 9498383075 மற்றும் 9498383076 ஆகிய செல்போன் எண்களில் தெரிவித்து பயன்பெற கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வு வினாத்தாட்கள் தொடர்பாக தேர்வு நாட்களில் அன்றைய தேர்வுக்குரிய வினாத்தாட்கள் குறித்த புகார்கள் கருத்துக்கள் மற்றும் சந்தேகங்களை மாணவர்கள் , தேர்வர்கள் dgequestion paperqueries@gmail.com என்ற முகவரியில் தெரிவிக்கலாம்.
பொதுத்தேர்வில் முறைகேடுகளில் ஈடுபடும் தேர்வர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்,செல்போன் தேர்வு மையத்தில் பயன்படுத்தக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ