Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 மார்ச் (ஹி.ச.)
தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் விஜய் தலைமையேற்று நடத்தும் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிட சுமார் 4 ஆயிரத்து 200க்கும் மேற்பட்டோர் விருப்ப மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர் எனத் தகவல் வெளியாகியிருந்தது.
தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் சென்னை பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்தில் இன்று (10.03.2026) காலை 11:30 மணி முதல் தொடங்கியுள்ளது.
முதற்கட்டமாக 60 தொகுதிகளில் தலா ஒவ்வொரு தொகுதிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட 3 பேரிடம் விஜய் நேரடியாக நேர்காணல் நடத்துகிறார் எனக் கூறப்படுகிறது.
இந்த நேர்காணல் நேரடியாக நடைபெற்று வருகிறது.
நேர்காணலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் நேர்காணல் நேரம் மற்றும் விவரங்கள் மின்னஞ்சல் மூலம் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டன. அதன்படி நேர்காணல் நடைபெற்று வருகிறது.
இதில் தேர்தலில் வெற்றி வாய்ப்புள்ள, தகுதியான வேட்பாளர்களைக் கண்டறியும் நோக்கில் இந்த நேர்காணல் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அடுத்த இரண்டு வாரங்களுக்குள் வேட்பாளர் பட்டியல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நேர்காணலில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் மற்றும் முக்கிய நிர்வாகிகள் எனப் பலரும் பங்கேற்றுள்ளனர்.
அதே சமயம், கரூர் பொதுக்கூட்ட நெரிசல் தொடர்பான சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராகுமாறு விஜய்க்குச் சம்மன் அனுப்பப்பட்டுள்ள நிலையில், தேர்தல் பணிகளைக் காரணமாகக் கூறி ஆஜராக 10 நாட்கள் கால அவகாசம் கோரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / vidya.b