Enter your Email Address to subscribe to our newsletters

கிருஷ்ணகிரி, 10 மார்ச் (ஹி.ச.)
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள வரண்ட ஏரிப் பகுதியில் இன்று காலை ஆண் ஒருவரின் சடலம் கிடப்பதைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து உடனடியாக மத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மத்தூர் காவல்துறையினர், சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர் கடலூர் மாவட்டம், எல்லப்பன் பேட்டை அருகே உள்ள குறிஞ்சிப்பாடி கிராமத்தைச் சேர்ந்த சதாசிவம் என்பவரின் மகன் மகேஷ் (45) என்பது தெரியவந்தது.
மகேஷ் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படுகிறது. இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவ்வப்போது வீட்டை விட்டு வெளியேறுவதும், பின்னர் மீண்டும் வீடு திரும்புவதுமாக இருந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய மகேஷ், கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் கிராமத்திலேயே தங்கி அங்கேயே சுற்றித் திரிந்துள்ளார்.
மேலும் காவல்துறையினர் மகேஷின் உடலை மீட்டு சோதனை செய்தபோது, அவர் வைத்திருந்த பையில் 7,500 ரூபாய் ரொக்கப் பணம் இருந்தது கண்டறியப்பட்டது.
6 மாதங்களாக வீட்டை பிரிந்து வாழ்ந்த நிலையிலும், அவரிடம் இவ்வளவு பணம் இருந்தது போலீசாரின் கவனத்தை ஈர்த்துள்ளது. மகேஷின் உடல் தற்போது உடற்கூறு ஆய்வுக்காக மத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN