நெல்லை - மங்களூரு புதிய ரயில் சேவையை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்
திருநெல்வேலி, 10 மார்ச் (ஹி.ச.) திருச்சி பஞ்சப்பூர் அருகே நாளை (மார்ச் 11) தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வந்து, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம
நெல்லை - மங்களூரு புதிய ரயில் சேவையை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்


திருநெல்வேலி, 10 மார்ச் (ஹி.ச.)

திருச்சி பஞ்சப்பூர் அருகே நாளை (மார்ச் 11) தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

இதில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வந்து, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பஞ்சப்பூர் செல்கிறார்.

அங்கு அரசு விழாவில் நிறைவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

அந்த வகையில் நெல்லை மற்றும் கர்நாடக மாநிலம் மங்களூரு இடையே புதிய வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி நாளை (புதன்கிழமை) காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.

நெல்லை சந்திப்பில் இருந்து மங்களூருவுக்குப் புதிய வாராந்திர ரயில் (வண்டி எண்: 16707 / 16708) சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் நெல்லையிலிருந்து ஒவ்வொரு புதன்கிழமையும் பிற்பகல் 3:45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 6:55 மணிக்கு மங்களூரு சென்றடையும்.

மறுமார்க்கத்தில், மங்களூருவிலிருந்து வியாழக்கிழமை தோறும் மதியம் 1 மணிக்கு புறப்படும் ரயில், மறுநாள் காலை 7:45 மணிக்கு நெல்லை வந்தடையும்.

இந்த ரயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கொல்லங்கோடு, பாலக்காடு டவுன், பாலக்காடு, சோரனூர், திரூர், கோழிக்கோடு, வடகரை, தலசேரி, கண்ணூர், காஞ்சங்காடு மற்றும் காசர்கோடு ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயிலில் மொத்தம் 17 எல்.எச்.பி. (LHB) ரக பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதில் 4 பொதுப் பெட்டிகள், 8 மூன்றடுக்கு படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், 2 மூன்றடுக்கு ஏ.சி. பெட்டிகள், 1 இரண்டடுக்கு ஏ.சி. பெட்டி, ஒரு மாற்றுத்திறனாளி பெட்டி மற்றும் ஒரு சரக்கு பெட்டியுடன் கூடிய கார்டு பெட்டி ஆகியவை அடங்கும்.

திருச்சியில் நாளை நடைபெறும் விழாவில் கலந்து கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்தபடி காணொலி காட்சி மூலம் இந்த ரயில் சேவையைத் தொடங்கி வைக்கிறார்.

இதனை முன்னிட்டு நெல்லை சந்திப்பில் முக்கியப் பிரமுகர்கள் மற்றும் ரயில்வே அதிகாரிகள் கலந்து கொள்ளும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b