Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 மார்ச் (ஹி.ச.)
உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு, பொதுமக்களிடையே சிறுநீரக ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சென்னை அடையாறில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிரம்மாண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரி மற்றும் கே.எச்.ஐ (KHI) தொண்டு நிறுவனம் இணைந்து நடத்தின. இதில் கல்லூரியில் பயிலும் 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் ஒன்றிணைந்து, திறந்தவெளியில் மனித சிறுநீரகத்தின் வடிவத்தை (Human Kidney Formation) தத்ரூபமாக உருவாக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
சிறுநீரக ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் சமூகத்தின் கூட்டுப் பொறுப்பு எவ்வளவு முக்கியம் என்பதை இந்த நிகழ்வு பறைசாற்றியது.
செய்தியாளர்களிடம் பேசிய கே.எச்.ஐ தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர் பிரபு,
சிறுநீரக நோய் குறித்த முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்:
இந்தியாவில் மக்கள் தொகையில் எட்டில் ஒருவருக்கு சிறுநீரகப் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு சிறுநீரகப் பாதிப்பு இருப்பது ஆய்வுகளில் கண்டறியப்பட்டு வருகிறது.
சிறுநீரக நோய் குறித்த போதிய விழிப்புணர்வு மக்களிடம் இன்னும் சென்றடையவில்லை என்பதை அவர் கவலையுடன் சுட்டிக்காட்டினார்.
சிறுநீரக பாதிப்புகளைக் கையாளவும், தகுந்த சிகிச்சை அளிக்கவும் தமிழ்நாட்டில் மிகச்சிறந்த மருத்துவக் கட்டமைப்புகள் உள்ளன.
பொதுமக்கள் ஆரம்ப நிலையிலேயே பரிசோதனை செய்துகொள்வது அவசியம், என வலியுறுத்தினார்.
Hindusthan Samachar / GOKILA arumugam