Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 11 மார்ச் (ஹி.ச.)
2025-2026 ஆம் கல்வியாண்டில், 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று முதல் ஏப்ரல் 06ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 109 தேர்வு மையங்களில் 22,221 தேர்வர்கள் 10 ஆம் பொதுத் தேர்வினை எழுதி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கு 109 முதன்மைக் கண்காணிப்பாளர்களும், மூன்று கூடுதல் முதன்மைக் கண்காணிப்பாளரும் 109 துறை அலுவலர்கள், 1280 அறைக் கண்காணிப்பாளர்கள், 129 நிலையான படையினர், 285 சொல்வதை எழுதுபவர், 24 வழித்தட அலுவலர்கள், 10 வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், 218 ஆசிரியரல்லா பணியாளர்கள் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அனைத்து தேர்வு மையங்களிலும் காற்றோட்டமான தேர்வறைகள், தூய்மையான குடிநீர்வசதி, தூய்மையான கழிப்பறை வசதி போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கென தரைதளத்தில் உள்ள தேர்வறைகளில் தேர்வெழுதவும் சொல்வதை எழுதுபவர் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வு நடைபெறும் மையங்களுக்கு உரிய போக்குவரத்து வசதி, காவலர் பாதுகாப்பு வசதி, தடையில்லா மின்சாரம் ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டு, தேர்வுகள் நல்ல முறையில் நடைபெற தகுந்த வசதிகள் செய்யப்பட்டுள்ளது என அம்மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b