Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 11 மார்ச் (ஹி.ச)
கோவை மாநகராட்சியில் தினமும் சேகரமாகும் குப்பையானது வெள்ளலுார் கிடங்கில் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகிறது.
குப்பை சேர்வது நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதால் இதற்கு நிரந்தர தீர்வு காண, குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்க தமிழக அரசு திட்டமிட்டது.
முதல்கட்டமாக, கோவை, மதுரையில் செயல்படுத்தும் வகையில் டெண்டர் கோரியிருக்கிறது.
இதன்படி நாளொன்றுக்கு 1200 டன் குப்பை கையாளும் திறனில் மின்னுற்பத்தி நிலையம் மற்றும் குப்பை கிடங்கு உருவாக்கப்படும்.
வெள்ளலுாரில் கிடங்கில் இதற்காக 35 ஏக்கர் ஒதுக்கப்பட்டு உள்ளது.
இம்மையம் பயன்பாட்டுக்கு வரும்போது, கழிவு உடனுக்குடன் அழிக்கப்படும். மின்னுற்பத்தி மையத்தை சொந்த செலவில் கட்டி, 30 ஆண்டுகள் இயக்க வேண்டும்.
அதன்பின், அரசு வசம் ஒப்படைக்கும் என்கிற நிபந்தனையோடு தனியார் நிறுவனங்கள் அழைக்கப்பட்டு உள்ளன. திட்ட மதிப்பீடு 450 கோடி ரூபாய், டெண்டர் கோர ஏப் 2 கடைசி நாள்.
இது குறித்து ஆணையர் சிவகுரு பிரபாகரனிடம் கூறுகையில்,
கோவையில் சேகரமாகும் குப்பை மட்டுமின்றி, சுற்றியுள்ள உள்ளாட்சி பகுதிகளில் சேகரிக்கும் குப்பை மற்றும் திருப்பூர் குப்பையையும் மின்சாரம் தயாரிக்க பயன்படுத்த உள்ளோம். கோவையில் தரம் பிரித்து சேகரிக்கிறோம்.
திருப்பூரில் தரம பிரிக்காத குப்பையாக வருகிறது. தரம் பிரித்து கொடுக்க கோருவோம். முடியாத பட்சத்தில், டில்லியில் இருப்பதை போல், மிக்ஸ்டு குப்பையை மின்சாரமாக மாற்றும் திறனுள்ள பிளான்ட் உருவாக்குவோம்.
நாளொன்றுக்கு 1,200 டன் கழிவுகளில் இருந்து 20 மெகாவாட் மின்னுற்பத்தி செய்ய முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b