Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 11 மார்ச் (ஹி.ச.)
சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடுகளை தீர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் அறிக்கை விடுத்துள்ளது.
அதில் தெரிவித்ததாவது;
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தற்போது சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர்களின் கடுமையான தட்டுப்பாடு நிலவி வருவதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.
சிலிண்டர் முன்பதிவு செய்த பிறகும் பல நாட்கள் முதல் வாரங்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இந்த நிலைமை ஏழை மற்றும் நடுத்தர வர்க்க குடும்பங்களின் அன்றாட வாழ்க்கையை கடுமையாக பாதித்து வருகிறது.
பொதுமக்களின் அத்தியாவசிய தேவையாக மாறியுள்ளது. குறிப்பாக பெண்கள் தலைமையிலான குடும்பங்கள், தினக்கூலி தொழிலாளர்கள், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் ஆகியோருக்கு சிலிண்டர் கிடைக்காத நிலை மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்பதிவு செய்த பிறகும் சரியான நேரத்தில் சிலிண்டர் கிடைக்காததால் பல குடும்பங்கள் தங்களது அன்றாட சமையலை நடத்த முடியாமல் தவிக்கும் சூழல் உருவாகியுள்ளது.சில இடங்களில் விநியோக தாமதம் காரணமாக மக்கள் பலமுறை எரிவாயு முகவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நீண்ட காலம் காத்திருக்க வேண்டியதால் குடும்பங்களின் அன்றாட உணவு தயாரிப்பே பாதிக்கப்படுகிறது. இதன் விளைவாக பல ஏழை குடும்பங்கள் மீண்டும் விறகு அடுப்பு போன்ற பழைய எரிபொருட்களை பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
இது பெண்களின் உடல் நலத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்துவதுடன், சமையலுக்கான கூடுதல் உழைப்பையும் நேரத்தையும் பெண்கள் மீது சுமத்துகிறது.மேலும், சிலிண்டர் தட்டுப்பாட்டை பயன்படுத்தி சில இடங்களில் கள்ள சந்தை மற்றும் அதிக விலையில் விற்பனை நடைபெறுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
இந்த நிலைமை பொதுமக்களின் பொருளாதார சுமையை மேலும் அதிகரிக்கிறது.இத்தகைய சமையல் எரிவாயு தட்டுப்பாடு நீடித்தால் அதன் தாக்கம் குடும்பங்களின் சமையலறையைத் தாண்டி சமூகத்தின் பல்வேறு துறைகளையும் பாதிக்கும் அபாயம் உள்ளது.
குறிப்பாக சிறிய மற்றும் நடுத்தர உணவு விடுதிகள், டீ கடைகள், தெரு உணவகங்கள் போன்றவை சமையல் எரிவாயுவை நம்பியே உள்ளது .எரிவாயு கிடைக்காத நிலை நீடித்தால் இவ்வகை சிறு தொழில்கள் செயல்பட முடியாமல் மூடப்படும் அபாயம் உள்ளது.
இதன் விளைவாக இல் தொழிலலை நம்பி உள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்களும் தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.
மேலும், உணவு தயாரிப்பு மற்றும் விநியோக அமைப்புகள் பாதிக்கப்படுவதால் உணவுப் பொருட்களின் விலையும் உயரக்கூடிய சூழல் உருவாகிறது. போக்குவரத்து செலவுகள் அதிகரித்தால் ஆட்டோ, வாகன கட்டணங்கள் உயர்வதும் தவிர்க்க முடியாததாகிறது.
இதன் தொடர்ச்சியாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு, போக்குவரத்து செலவுகள் அதிகரிப்பு போன்றவை சங்கிலித் தொடர்புபோல் அத்தியாவசிய பொருட்களின் விலையையும் உயர்த்தும் அபாயம் உள்ளது. இதனால் ஏற்கனவே விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் வாழ்க்கை மேலும் சிரமத்திற்கு தள்ளப்படும்.உலகளாவிய அளவில் நடைபெற்று வரும் போர்கள், எரிபொருள் சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், அமெரிக்காவின் அரசியல்–பொருளாதார ஆதிக்கம் போன்ற காரணங்களால் உலக எரிசக்தி விநியோக அமைப்பில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
இத்தகைய சூழ்நிலையில் இந்தியா போன்ற நாடுகளில் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் போதிய அளவில் சமையல் எரிவாயு விநியோகத்தை உறுதி செய்வது ஒன்றிய அரசின் பொறுப்பாகும். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பொதுமக்களுக்கு சீரான முறையில் விநியோகம் செய்யபடாத நிலை நீடிக்கிறது.எனவே,சமையல் எரிவாயு சிலிண்டர்களின் போதிய விநியோகத்தை உடனடியாக அதிகரிக்க வேண்டும்.முன்பதிவு செய்த பொதுமக்களுக்கு தாமதமின்றி சிலிண்டர்கள் கிடைக்க உறுதி செய்ய வேண்டும்.விநியோக தாமதத்திற்கு காரணமான நிர்வாக குறைபாடுகளை சரிசெய்ய வேண்டும்.
கள்ள சந்தை மற்றும் அதிக விலையில் விற்பனை செய்யும் செயல்களை கடுமையாக கட்டுப்படுத்த வேண்டும்.ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கு சீரான மற்றும் மலிவு விலையில் சமையல் எரிவாயு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை கடுமையாக பாதிக்கும் இந்த பிரச்சினையை தீர்க்க ஒன்றிய அரசு உடனடி துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ்நாடு மாநில குழு வலியுறுத்துகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டது.
Hindusthan Samachar / GOKILA arumugam