Enter your Email Address to subscribe to our newsletters

கிருஷ்ணகிரி, 11 மார்ச் (ஹி.ச.)
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த சிகரலப்பள்ளி பஞ்சாயத்து, பார்டர் காட்டூர் கிராமத்தில் சுமார் 2,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து
வருகின்றன. இந்தப் பகுதியில் கடந்த சில காலங்களாகவே குடிநீர் தட்டுப்பாடு
நிலவி வருவதாகவும், அடிப்படை வசதிகள் கோரி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இப்பகுதியில் உள்ள தனிநபர் ஒருவர் வணிக நோக்கத்திற்காக தனது
நிலத்தில் 4-க்கும் மேற்பட்ட ஆழ்துளைக் கிணறுகளை (Borewells) பல்லாயிரம் அடி ஆழத்தில் அமைத்துள்ளார். குறிப்பாக, விவசாயத்திற்காக வழங்கப்பட்ட இலவச மின்
இணைப்பைத் தவறாகப் பயன்படுத்தி, நிலத்தடி நீரை உறிஞ்சி மிகப்பெரிய பள்ளத்தில் தேக்கி வைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இவ்வாறு தேக்கி வைக்கப்படும்
நிலத்தடி நீர், நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கான லிட்டர் அளவில் டேங்கர் லாரிகள்
மூலம் வெளி மாநிலங்களுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் மற்றும்
தொழிற்சாலைகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருவதாகக் கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்திற்குச்
சென்று, விவசாயமும் குடிநீர் ஆதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது.
அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த பார்டர் காட்டூர் கிராம மக்கள், இன்று வெளி மாவட்டத்திற்குத் தண்ணீர் ஏற்றிச் செல்ல வந்த டேங்கர் லாரியைச்
சிறைபிடித்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல்
அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பர்கூர் டி.எஸ்.பி சுரேஷ்குமார்,
போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
தண்ணீர் விற்பனை செய்யப்படுவதை உடனடியாகத் தடுக்க வேண்டும்.
விதிகளை மீறி செயல்படும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், இந்தப் போராட்டம் தொடரும் என பொதுமக்கள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.
தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், இந்தப் பகுதியில் நிலத்தடி நீரைச் சுரண்டும் நபர்கள் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கிராம மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக
உள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam