உண்மையாக உழைக்க விரும்பும் செயல் வீரர்கள் பணியை முழுமையாக செய்ய முடியாத சூழ்நிலை - கோகிலா அனிஷ்
கன்னியாகுமரி, 11 மார்ச் (ஹி.ச) தவெக பிரச்சினைகள் குறித்துதமிழக வெற்றிக் கழக கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட நிர்வாகி கோகிலா அனிஷ் கருத்து தெரிவித்து இருக்கிறார். அவரது அறிக்கையில், நான் கோகிலா அனிஷ், கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த பதவியும் எதிர்பார்க்க
Kokila anish


கன்னியாகுமரி, 11 மார்ச் (ஹி.ச)

தவெக பிரச்சினைகள் குறித்துதமிழக வெற்றிக் கழக கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட நிர்வாகி கோகிலா அனிஷ் கருத்து தெரிவித்து இருக்கிறார்.

அவரது அறிக்கையில்,

நான் கோகிலா அனிஷ், கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த பதவியும் எதிர்பார்க்காமல், உங்கள் தலைமையின் மீது கொண்ட முழு நம்பிக்கையாலும், உங்கள் எண்ணங்களையும் கொள்கைகளையும் ஆதரிக்கும் மனதாலும் தமிழக வெற்றிக் கழகத்தின் பணிகளில் ஈடுபட்டு வருகிறேன்.

அரசியல் பின்னணி இல்லாத ஒரு குடும்பத்தில் இருந்து வந்த ஒரு பெண்ணாக, ஆரம்பத்தில் இந்த பாதையில் நடப்பது எளிதாக இருக்கவில்லை. குடும்ப பொறுப்புகளையும் கவனித்துக் கொண்டு மக்களை சந்தித்து, கட்சியின் எண்ணங்களை எடுத்துச் செல்லும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறேன். பல சிரமங்களையும் எதிர்கொண்டாலும், கட்சியின் வளர்ச்சிக்காக அமைதியாகவே பணியாற்றி வந்தேன்.

ஆனால் மாவட்ட மட்டத்தில் சில பிரச்சனைகள் தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன. குறிப்பாக நீங்கள் அதிகமாக வேலை செய்ய வேண்டாம், நாங்கள் சொல்வதை மட்டும் கேட்டு செய்யுங்கள் என்ற வகையில் எங்களைத் தடுக்க முயற்சிகள் பலமுறை நடந்துள்ளன. மக்கள் சந்திப்பு கூட்டங்கள் அல்லது மற்ற நிகழ்ச்சிகளை நடத்த முயன்ற போதும் பல தடைகள் ஏற்பட்டுள்ளன.

இது யாரையும் குறை கூறுவதற்காக அல்ல. ஆனால் கட்சிக்காக உண்மையாக உழைக்க விரும்பும் செயல்வீரர்கள் தங்களின் பணியை முழுமையாக செய்ய முடியாத சூழ்நிலை உருவாகும்போது அது மிகவும் வேதனையாக இருக்கிறது.

மேலும், சில இடங்களில் எங்களை மனவேதனைக்குள்ளாக்கும் வகையில் சில கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. உங்களுக்கு எந்தப் பதவியும் இல்லை, நீங்கள் ஏன் இந்த வேலைகளை செய்கிறீர்கள்? என்று கேட்கப்பட்டதோடு, பொதுமக்களிடமும் அவர்களுக்கு எந்தப் பதவியும் கிடைக்காது, அவர்கள் பின்னால் செல்ல வேண்டாம் என்ற வகையிலும் கூறப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன.

இதனால், பொதுமக்களை சந்தித்து கட்சியின் பணிகளை முன்னெடுக்க முயன்றபோது பல இடங்களில் தேவையற்ற தடைகள் உருவாகின்றன. இது மனவேதனையை ஏற்படுத்திய விஷயமாக இருந்தாலும், கட்சியின் வளர்ச்சிக்காக அமைதியாகவே தொடர்ந்து பணியாற்றி வந்தேன்.

பலர் இதை வெளியில் சொல்ல வேண்டாம், அமைதியாக இருங்கள் என்று கூறுகிறார்கள். சிலர் மேலிடம் வரை எடுத்துச் செல்லுங்கள் என்றும் கூறுகிறார்கள். ஆனால் உண்மையில், இந்த பிரச்சனைகளை நேரடியாக தலைமையிடம் எடுத்துச் செல்ல எங்களிடம் எந்தத் தெளிவான வழியும் இல்லை. அதுவே எங்களின் மிகப்பெரிய சிக்கல்.

பலரும் இந்த விஷயங்களை சொல்லத் தயங்குகிறார்கள். அவர்கள் மனதில் வைத்துக் கொண்டு அமைதியாக இருக்கிறார்கள். ஆனால் உங்கள் மீது கொண்ட முழு நம்பிக்கையால்தான் இந்த விஷயத்தை நேர்மையாக உங்கள் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று எண்ணியுள்ளேன். இது எல்லா இடங்களிலும் நடக்கிறது என்று நான் கூற வரவில்லை; ஆனால் எங்களிடம் ஏற்பட்ட அனுபவத்தை பகிர்கிறேன்.

மேலும் ஒரு விஷயத்தை தெளிவாக சொல்ல விரும்புகிறேன். சமீபத்தில் வேட்பாளர் விருப்ப மனு அளிக்கும் வாய்ப்பு கிடைத்தபோது நான் மனு அளித்தது எந்த பதவி அல்லது MLA வேட்பு நோக்கத்திற்காக அல்ல. அந்த வாய்ப்பின் மூலம் உங்களை நேரில் சந்தித்து எங்கள் மாவட்டத்தில் நடக்கும் விஷயங்களை தெரிவிக்கவும், கட்சியை இன்னும் சிறப்பாக எப்படி வளர்த்துக்கொள்ளலாம் என்பதைக் கூறவும் வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அதை செய்தேன்.

நான் எந்த பதவிக்கும் பின்னால் செல்லவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த பதவியும் இல்லாமல் கட்சி க்காக உழைத்து வருகிறேன். யார் இந்த தொகுதியில் வேட்பாளராக நியமிக்கப்படுகிறார்களோ, அவர்கள் உண்மையாக கட்சிக்காக உழைக்கும் நபராக இருந்தால் அவர்களை வெற்றி பெறச் செய்வதற்காக முழு ஆதரவுடன் நாங்கள் பணியாற்றத் தயாராக இருக்கிறோம்.

எங்களின் ஒரே வேண்டுகோள் - அடிப்படை மட்டத்தில் உழைக்கும் செயல்வீரர்கள் தங்களின் கருத்துகளையும் பிரச்சனைகளையும் தலைமையிடம் பகிரக்கூடிய ஒரு தெளிவான வழிமுறை இருக்க வேண்டும். அப்படி இருந்தால் கட்சியின் வளர்ச்சிக்கும் செயல்வீரர்களின் உற்சாகத்திற்கும் அது மிகவும் உதவியாக இருக்கும்.

இதை சமூக வலைதளத்தில் பகிர வேண்டிய நிலை உருவானது எனக்கும் எளிதான முடிவு அல்ல. ஆனால் இந்த விஷயம் எப்படியாவது உங்கள் கவனத்திற்கு சென்றடைய வேண்டும் என்ற ஒரே எண்ணத்தாலும், உங்கள் மீது கொண்ட முழு நம்பிக்கையாலும் தான் இதை பகிரத் துணிந்துள்ளேன்.

நீங்கள் எப்போதும் செயல்வீரர்களின் மனதை புரிந்துகொள்ளும் தலைவராக இருக்கிறீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்று தெரிவித்துள்ளார் என்று பதிவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN