Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 11 மார்ச் (ஹி.ச.)
திருச்சிக்கு இன்று வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி ரூ.5,655 கோடி மதிப்பீட்டிலான நலத் திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
தொடர்ந்து, பஞ்சப்பூரில் இருந்து விமான நிலையம் வரை 10 கி.மீ. தொலைவுக்கு நடைபெறும் பிரதமரின் பிரம்மாண்ட ரோடு ஷோவில் பல லட்சம்பேர் பங்கேற்க உள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி, கேரளம் மாநிலம் கொச்சியில் இருந்து ராணுவத்துக்குச் சொந்தமான விமானம் மூலம் இன்று மாலை 5 மணியளவில் திருச்சி விமான நிலையத்துக்கு வருகை தருகிறார்.
அங்கிருந்து 5.15 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு பஞ்சப்பூர் புதிய பேருந்து முனையம் அருகே எடமலைப்பட்டி புதூரில் அமைந்த ஹெலிபேடில் இறங்குகிறார்.
அங்கு நடைபெறும் அரசு விழாவில், சென்னை மணலியில் 1490 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் நிறுவனத்தின் எண்ணெய் கலவை ஆலை,
நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் 3680 கோடி மதிப்பீட்டில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் நகர எரிவாயு விநியோகத் திட்டங்கள்,
பாரத பிரதமரின் கிராமப்புறச் சாலைகள் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் 370.52 கி.மீ. நீளமுள்ள 89 சாலைகளை திறந்து வைப்பது உள்ளிட்ட ரூ.5,655 கோடிக்கும் அதிகமான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
அதனை தொடர்ந்து கங்கைகொண்ட சோழபுரத்தில் புறவழிச் சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
மேலும், ராமேசுவரம்- மங்களூரு விரைவு ரயில்,
நாகர்கோவில்- சார்லப்பள்ளி அம்ரித் பாரத் விரைவு ரயில்,
போத்தனூர் (கோவை)- தன்பாத் அம்ரித் பாரத் விரைவு ரயில்,
திருநெல்வேலி- மங்களூரு சந்திப்பு விரைவு ரயில்,
மயிலாடுதுறை-காரைக்குடி ரயில் ஆகிய 5 ரயில் சேவைகளை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
அதன்பிறகு, அதேபகுதியில் அமைக்கப்பட்டுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் அரசியல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி சிறப்புரை ஆற்றுகிறார்.
இந்த பொதுக்கூட்டத்தில், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், பாமக தலைவர் அன்புமணி, ஐஜேகே தலைவர் பாரிவேந்தர், புதிய நீதிக்கட்சியின் சண்முகம், முத்தரையர் முன்னேற்றச் சங்கத்தின் ஆர்.விஸ்வநாதன் உட்பட கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
பொதுக்கூட்டம் நிறைவடைந்த பின்னர், மாலை 6.45 மணியளவில் பிரதமர் அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு பஞ்சப்பூர், எடமலைப்பட்டி புதூர், சிறப்பு காவல்படை முகாம், மன்னார்புரம் நான்கு சாலை, டிவிஎஸ் டோல்கேட் வழியாக விமான நிலையம் வரை மொத்தம் 10 கி.மீ. தொலைவுக்கு நடை பெறும் ரோடு ஷோவில் பங்கேற்கிறார்.
இரவு 8 மணியளவில் விமான நிலையம் செல்லும் பிரதமர், அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.
பிரதமரின் திருச்சி வருகையையொட்டி, திருச்சி மாநகரம் பலத்த பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ