Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 11 மார்ச் (ஹி.ச.)
நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரதில் உரிய அனுமதியின்றி வைக்கப்பட பேனர் கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த பள்ளி மாணவி, இதற்கு காரணமான அக்கட்சி நிர்வாகிகள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு பொது செயலாளர் அருண்ராஜ் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மல்லசமுத்திரத்தில், திமுக கூட்டணிக் கட்சியினர் வைத்திருந்த பேனர் சரிந்து விழுந்ததில், பள்ளி மாணவி ஒருவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டிய நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நல்லவேளையாக, அந்த மாணவி உயிர் தப்பியுள்ளார்.
போக்குவரத்து மிகுந்த பேருந்து நிறுத்தத்திற்கு அருகில், முறையான அனுமதியின்றி, பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் இந்தப் பேனர் வைக்கப்பட்டிருந்தது குறித்து காவல் நிலையத்திலும், அரசு அதிகாரிகளிடமும் முன்பே புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது.
ஆளுங்கட்சிக்குப் பயந்து பேனர் குறித்த புகார்களை அதிகாரிகள் தட்டிக்கழித்திருக்கிறார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. உரிய அனுமதி பெற்று தமிழக வெற்றிக் கழகத்தினர் வைக்கும் பேனர்களை எல்லாம் தேடிப்பிடித்து அராஜகமாக அகற்றும் அதிகாரிகள், தற்போது நடந்துள்ள இந்த விபத்துக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? கட்சிக்கு ஒரு நீதியா?
அனுமதியின்றி பேனர் வைத்து மக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவித்த கட்சி நிர்வாகிகள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.தவறும்பட்சத்தில், தவெக சார்பில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டுப் போராட்டம் நடத்தப்படும் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ