பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அமீரக ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 2 விமானிகள் மரணம்
அபுதாபி, 11 மார்ச் (ஹி.ச.) அமீரகத்தின் மீது ஈரானிய ஏவுகணை தாக்குதல் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இதனால், தனது நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக அமீரகம் ஈரான் நாட்டிற்கு எச்சரிக்கை விடுத்தது. மேலும், ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அமீரக ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 2 விமானிகள் மரணம்


அபுதாபி, 11 மார்ச் (ஹி.ச.)

அமீரகத்தின் மீது ஈரானிய ஏவுகணை தாக்குதல் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இதனால், தனது நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக அமீரகம் ஈரான் நாட்டிற்கு எச்சரிக்கை விடுத்தது. மேலும், ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை எதிர்கொள்ள தேவையான எல்லா நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

இந்நிலையில், அமீரக ஆயுதப்படையினர் நாட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்தப் படையில் இருந்த கேப்டன் சயீத் அல் பலூஷி மற்றும் முதல் லெப்டினன்ட் அலி அல் துனைஜி ஆகிய இருவரும் ராணுவ ஹெலிகாப்டரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, எதிர்பாராத விதமாக ஹெலிகாப்டரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. அதைச் சரிசெய்ய முயன்றும், முயற்சி தோல்வியடைந்து ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரை இயக்கிய சயீத் அல் பலூஷி மற்றும் அலி அல் துனைஜி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இது குறித்து,அமீரக பாதுகாப்பு அமைச்சகம் இது தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது:

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏற்பட்ட இந்த விபத்தில் இரண்டு வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர்.

அவர்களின் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அவர்களின் குடும்பத்திற்கு இறைவன் ஆறுதலையும், மன அமைதியையும் தரட்டும்.

என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உயிரிழந்த விமானிகளின் உடல்கள் ஜாயித் ராணுவ மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பிறகு, முழு ராணுவ மரியாதையுடன் அமீரக தேசிய கொடி போர்த்தப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டன.

நேற்று அலி அல் துனைஜியின் உடல் அவரின் சொந்த ஊரான ராசல் கைமாவுக்கு கொண்டு செல்லப்பட்டது. பிறகு அங்குள்ள அல் ராம்ஸ் பகுதியில் இருக்கும் அப்துல்லா அல் அமாஷி பள்ளிவாசலில் வைக்கப்பட்டு, மதிய நேர தொழுகைக்கு பிறகு ஜனாஸா தொழுகை நடைபெற்றது. இதில் ராசல் கைமாவின் ஆட்சியாளர் மேதகு ஷேக் சவுத் பின் சகர் அல் காஸிமி கலந்து கொண்டார். பின்னர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அதேபோல, மற்றொரு விமானியான சயீத் அல் பலூஷியின் உடல் அவரது சொந்த ஊரான அல் அய்னுக்கு கொண்டு செல்லப்பட்டு அல் முவாத்தரத் அல் கபீர் பள்ளிவாசலில் மதிய தொழுகைக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்பட்டது.

தற்போது உயிரிழந்த 2 விமானிகளில் ஒருவரான அலி அல் துனைஜி கடைசியாக பேசிய ஆடியோ பதிவானது வெளியாகி அமீரகத்தில் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அந்த விமானியின் இறுதி வார்த்தைகள் பின்வருமாறு:

உலகங்களின் அதிபதியான இறைவனிடம் இருந்து எனக்கு நற்கூலி கிடைக்கிறது. நாம் தியாகிகளாக இருக்க வேண்டும் என்று எழுதப்பட்டு இருந்தால், நாம் தியாகிகளாகவே கொல்லப்படுவோம். நீங்கள் நிம்மதியாக தூங்குங்கள், அதுவே எங்களுக்குப் போதும்.

என்று கூறியுள்ளார்.

இந்த வார்த்தைகள் பலரையும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. தேசத்திற்காக பெருமையுடன் சேவை செய்து வீர மரணம் அடைந்த வீரர்களின் தைரியம், அர்ப்பணிப்பு மற்றும் தியாகத்தை பலரும் சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர்.

Hindusthan Samachar / JANAKI RAM