Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 11 மார்ச் (ஹி.ச.)
பிரதமர் நரேந்திர மோடி கேரளா மற்றும் தமிழ்நாட்டிற்கு இன்று (11.03.2026) வருகை தருகிறார். அதன்படி பிற்பகல் 01:30 மணியளவில், கேரளாவின் எர்ணாகுளத்தில் சுமார் 10 ஆயிரத்து 800 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, அடிக்கல் நாட்டினர்.
அதன் பிறகு, கேரள மாநிலத்திலிருந்து தனி விமானம் மூலம் மாலை 05:30 மணியளவில் அவர் திருச்சி விமான நிலையம் வந்தடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து திருச்சியில் நடைபெற்றும் அரசு விழாவில் சுமார் 5 ஆயிரத்து 650 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டுகிறார்.
இதனையடுத்து திருச்சியில் நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரம்மாண்டப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்ற உள்ளார்.
பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு திருச்சி மாநகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக இன்றும் நாளையும் (12.03.2026) திருச்சியில் டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் தமிழக பாஜகவின் மூத்த தலைவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில் மத்திய தகவல், ஒளிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறையின் இணை அமைச்சர் எல். முருகனிடம், த.வெ.க. தலைவர் விஜய், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வருகிறாரா? எனச் செய்தியாளர்கள் திருச்சியில் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் எல். முருகன், எல்லோரும் வருகிறார்கள்.
இது குறித்து அண்ணன் பேசுவார் எனப் பதிலளித்து விட்டு அங்கிருந்து காரில் புறப்பட்டுச் சென்றார்.
Hindusthan Samachar / vidya.b