Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி , 12 மார்ச் (ஹி.ச.)
தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அருகே வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவி நேற்று முன் தினம் இரவு இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டை விட்டு வெளியே சென்றவர், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இரவு முழுவதும் தேடியும் மாணவி கிடைக்காததால், குளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியைத் தேடி வந்தனர்.
இந்த நிலையில் மாணவி நேற்று மாலையில் காட்டுப்பகுதியில் முகம் மற்றும் உடலில் காயங்களுடன் பிணமாக மீட்கப்பட்டார்.
அவரது ஆடைகளும் களைந்து கிழிந்த நிலையில் இருந்த நிலையில் கழுத்தை துண்டால் இறுக்கியதற்கான தடயங்களும் இருந்தன.
எனவே மாணவி தனியாக சென்றதை அறிந்த மர்ம நபர்கள் கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு, கொலை செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
பின்னர் போலீசார் மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுபற்றி அறிந்த மாணவியின் பெற்றோர், உறவினர்கள், கிராம மக்கள் குறுக்குச்சாலை- ராமேஸ்வரம் சாலையில் அமர்ந்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மதன், துணை சூப்பிரண்டு ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தொடர்ந்து மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. மற்றும் வருவாய்த்து றையினரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
ஆனாலும் கிராம மக்கள் இரவிலும் போராட்டத்தை கைவிடாது தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் குறுக்குச்சாலை- ராமேஸ்வரம் மெயின் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அந்த வழியாக சென்ற வாகனங்கள் மாற்றுப்பைாதயில் திருப்பி விடப்பட்டன.
இறுதியில் குற்றவாளிகளை இரவுக்குள் கைது செய்துவிடுவோம் என போலீசார் உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
இந்நிலையில் இந்த கொடூர சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளைப் பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக நெல்லை சரக டி.ஐ.ஜி சரவணன் தகவல் தெரிவித்துள்ளார்.
இதனிடையே அசம்பாவிதங்களைத் தவிர்க்க வேடநத்தம் கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b