ஆகாஷ் லாக்கப் மரண வழக்கு தொடர்பாக பேருந்து நிலையத்தில் போராட்டம் நடத்தலாம் - மதுரை உயர்நீதிமன்றம் அனுமதி
மதுரை, 12 மார்ச் (ஹி.ச.) சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கைதி ஆகாஷ் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த விவகாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் முக்கிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மானாமதுரை காவல் மரணம் தொடர்பான
Akash


மதுரை, 12 மார்ச் (ஹி.ச.)

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கைதி ஆகாஷ் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த விவகாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் முக்கிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

மானாமதுரை காவல் மரணம் தொடர்பான விசாரணை நடைபெற்று கொண்டிருக்கும் சூழ்நிலையில், சிவகங்கை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணியாற்றி வந்த எஸ்பிசிஐடி ஆய்வாளர் வெங்கடேச பெருமாள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். ஆகாஷ் வழங்கியதாக கூறப்படும் நீதிமன்ற வாக்குமூலம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில் மானாமதுரை கைதி ஆகாஷ் மரணம் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றம் சில முக்கிய உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளது.

மானாமதுரை பகுதியில் ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போராட்டக்காரர்கள் இன்று மாலை 4 மணிக்குள் தாமாகவே கலைந்து செல்ல வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் குறிப்பிட்ட நேரத்திற்குள் போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாவிட்டால், காவல்துறையினர் அவர்களை அந்த இடத்திலிருந்து அகற்ற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் மானாமதுரை பழைய பேருந்து நிலையத்தில் போராட்டம் நடத்திக் கொள்ளலாம் என்றும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அந்த இடத்திற்கு போராட்டக்காரர்கள் செல்லாவிட்டால் காவல்துறையினர் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு மற்றும் நீதிமன்ற உத்தரவுகள் மானாமதுரை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN