மாணவி பாலியல் வன்கொடுமை,படுகொலை -அன்புமணி கண்டனம்
தமிழ்நாடு, 12 மார்ச் (ஹி.ச.) துளிர்களின் கனவுகளை சிதைக்கும் கயவர்களை காக்கும் திமுக அரசு வீழ்த்தப்பட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி அறிக்கை விடுத்துள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது; தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகில் 12&a
அன்புமணி


தமிழ்நாடு, 12 மார்ச் (ஹி.ச.)

துளிர்களின் கனவுகளை சிதைக்கும் கயவர்களை

காக்கும் திமுக அரசு வீழ்த்தப்பட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி அறிக்கை விடுத்துள்ளார்.

அதில் அவர் தெரிவித்துள்ளதாவது;

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகில் 12&ஆம் வகுப்பு பொதுத்தேர்வு

எழுதி விட்டு, வீடு திரும்பிய மாணவி கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை

செய்யப்பட்டு படுகொலை செய்யப் பட்டிருப்பது அதிர்ச்சியும், வேதனையும்

அளிக்கிறது.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு திசையிலும் பாலியல்

வன்கொடுமைகள் அதிகரித்து வரும் நிலையில், அத்தகையக் குற்றங்களைத் தடுக்க

நடவடிக்கை எடுக்காமல் மு.க.ஸ்டாலின் அரசு கண்களையும்,காதுகளையும் மூடிக்

கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

விளாத்திக்குளத்தை அடுத்த வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர்

நேற்று முன்நாள் 12&ஆம் வகுப்புப் பொதுதேர்வு எழுதி விட்டு வீடு

திரும்பியுள்ளார்.

அடுத்த சிறிது நேரத்தில் இயற்கை அழைப்புக்காக வீட்டின்

பின்புறம் சென்றவர் வெகுநேரமாகியும் திரும்பவில்லை.

24 மணி நேர தேடுதலுக்குப்

பிறகு நேற்று மாலை 5.00 மணியளவில் வேடநத்தம் காட்டுப்பகுதியில் ஆடைகள் களைந்த

நிலையில் முகம் மற்றும் உடலில் வெட்டுக்காயங்களுடன் மாணவி சடலமாக

கண்டெடுக்கப்பட்டார்.

மாணவியின் உடலை உடற்கூறு ஆய்வுக்கு உட்படுத்தியதில் அவர்

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதியானது.

மாணவி இயல்பாக நடமாடக்கூடிய அவரது வீட்டுப் பகுதியில் கூட பாதுகாப்பு இல்லை

என்பதையும், கட்டுப்பாடுகள் நிறைந்த கிராமப்பகுதியிலேயே மனித மிருகங்கள்

மாணவியை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யும் கொடுமை

நிகழ்கிறது என்றால் நாமெல்லாம் வளர்ச்சியடைந்த மாநிலம் என்று கூறப்படும்

தமிழ்நாட்டில் வாழ்கிறோமா? அல்லது சட்டம் & ஒழுங்கைப் பற்றி கவலைப்படாமல் ஒரு

கூட்டம் மட்டும் கொள்ளையடித்து சொகுசாக வாழ்வதற்காக மற்றவர்களின் நலன்களை காவு

கொடுக்கும் கொடூரமான நிர்வாகத்தில் வாழ்கிறோமோ? என்ற ஐயம் தான் எழுகிறது.

தமிழ்நாட்டில் பச்சிளம் குழந்தைகள் முதல் மூதாட்டிகள் வரை யாருக்கும்

பாதுகாப்பு இல்லை என்பதைத் தான் இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன.

சில நாள்களுக்கு முன்பு தான் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த ஓபகவலசை

கிராமத்தில் தோட்டத்து வீட்டில் வாழ்ந்து வந்த கண்ணப்பன் என்ற 74 வயது

முதியவரை கொலை செய்த கும்பல், அவரது மனைவியை பாலியல் வன்கொடுமை

செய்திருக்கிறது. அதைத் தொடர்ந்து கடந்த திங்கள்கிழமை இரவு சென்னையை அடுத்த

மதுராந்தகம் அருகில் 14 வயது சிறுமியை இரு மனித மிருகங்கள் கடத்திச் சென்று

கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளன. அதனால் ஏற்பட்ட அச்சமும், பதட்டமும்

கொஞ்சமும் விலகாத நிலையில், அதற்கு அடுத்த நாளே விளாத்திக்குளத்தில் அடுத்த

கொடூரம் அரங்கேற்றப்பட்டிருக்கிறது.

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவி 12&ஆம்

வகுப்புத் தேர்வை எழுதிக் கொண்டு இருந்தவர். அவருக்கு உயர்கல்வி, எதிர்கால

வாழ்க்கை தொடர்பாக ஆயிரமாயிரம் கனவுகள் இருந்திருக்கும். ஆனால், அவை அனைத்தும்

கயவர்களால் சிதைக்கப்பட்டு விட்டன.

இதைத் தடுக்க தமிழக அரசுக்கு துப்பில்லை.

மாறாக, மாணவர்களின் கனவுகளை அறிந்து, அவற்றை நிறைவேற்றப் போவதாக நாடகம்

நடித்துக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர்.

உண்மையில் தமிழ்நாட்டில் நடப்பது

மாணவர்களின் கனவுகளை நிறைவேற்றும் அரசு அல்ல... மாறாக, மாணவ, மாணவிகளின்

கனவுகளை சிதைக்கும் கொடிய கயவர்களைக் காப்பாற்றும் அரசு தான். இந்த அரசு

உடனடியாக வீழ்த்தப்பட வேண்டும்.

இந்த கொடூர நிகழ்வுகள் அனைத்தும் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் கற்கால

ஆட்சி நடைபெறும் தமிழ்நாட்டில் தான் நிகழ்ந்துள்ளன.

இவை குறித்த செய்திகளைக்

கேட்டவுடன் கல்நெஞ்சம் படைத்தவர்கள் கூட பதறுவார்கள்; பாதிக்கப்பட்ட

குடும்பங்களுக்கு தங்களின் ஆதரவையும், ஆறுதலையும் தெரிவிப்பர். ஆனால்,

உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் நடைபெறும் சம்பந்தமில்லாத நிகழ்வைக் கூட தமது

ஆட்சியின் சாதனையாக சம்பந்தப்படுத்திப் பேசும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அவர்கள், இந்த நிகழ்வுகள் குறித்து தமது வருத்தத்தைக் கூட இதுவரை

தெரிவிக்கவில்லை. இத்தகைய செயல்கள் இனி நடக்காமல் தடுக்க நடவடிக்கை

எடுக்கப்படும் என்ற உத்தரவாதத்தைக் கூட அவரால் அளிக்க முடியவில்லை. காரணம்...

இது குறித்து எதுவுமே தெரியாது. அந்த அளவுக்கு அவர் ஒரு மாய உலகில் வாழ

வைக்கப்படுகிறார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களைச் சுற்றி அமைச்சர்கள், அதிகாரிகள்

ஆகியோரைக் கொண்ட ஒரு கூட்டம் உள்ளது. அவர்கள் மகாத்மா காந்தியடிகளுக்கு

பரிசாகக் கிடைத்த 3 ஞானக் குரங்குகளைப் போன்றவர்கள். அவர்கள் எந்த கெட்ட

செய்தியையும் முதலமைச்சர் ஸ்டாலிடம் கூற மாட்டார்கள்; எந்த தீய செய்தியையும்

கேட்க மாட்டார்கள்; தீயவற்றைப் பார்க்க மாட்டார்கள். தமிழ்நாட்டில் மாதம் மும்மாரி பொழிகிறது; மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்; நமது அரசு

சாதனை மேல் சாதனைகளை படைத்துக் கொண்டிருக்கிறது என்ற மந்திரங்கள் மட்டும்

தான் முதல்வரின் காதுகளில் ஓதப்பட்டுக் கொண்டு இருக்கும். பகுத்தறிவு

இயக்கத்தைச் சேர்ந்தவர் என்று கூறிக் கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அவர்களும் இதையெல்லாம் எதிர்க்கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொண்டு, அவரை

இயக்குபவர்கள் ‘ஓகே... டேக்’ என்றதும் விளம்பரப் படத்தில் நடிக்கத் தொடங்கி,

‘கட்’ சொன்னதும் தமது கடமை முடிந்து விட்டதாக கருதிச் சென்று விடுவார். இந்தக்

காட்சிகள் தான் தமிழ்நாட்டில் தினமும் அரங்கேறுகின்றன.

ஆனால், பாவம்... அப்பாவி மக்கள் தான் படுகொலைகளுக்கும், கொள்ளைகளுக்கும்,

பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக வேண்டும். விலைவாசி உயர்வை எண்ணி

வேதனைப்படுவதற்குக் கூட அவர்களால் முடியாது. அவ்வாறு வேதனைப்பட்டாலும் அது

எட்டாத உயரத்தில் மாய உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் முதலமைச்சரின்

கவனத்திற்கு செல்லாது. இது தான் இன்றைய தமிழகத்தின் சாபக்கேடு.

ஐந்தாண்டுகளுக்கு முன் செய்த தவறுக்கு தமிழக மக்கள் தண்டனை அனுபவித்துக்

கொண்டிருக்கிறார்கள்.

திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் பெண்

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளின் எண்ணிக்கை மட்டும் 129%

அதிகரித்திருக்கிறது. 38 பெண் குழந்தைகள் கொடூரமான முறையில் பாலியல்

வன்கொடுமை/கூட்டுப் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை

செய்யப்பட்டுள்ளனர். இந்த வரிசையில் 39&ஆம் குழந்தையாக தூத்துக்குடி மாணவி

இணைந்திருக்கிறார். அவரை இழந்து வாரும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த

இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இனியும் இப்படி ஒரு

நிலை ஏற்படக்கூடாது. அதற்காக வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் திமுகவுக்கு மறக்க முடியாத பாடத்தை புகட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Hindusthan Samachar / GOKILA arumugam