சென்னையில் மாணவி காரில் கடத்தி பாலியல் கொடுமை செய்ததாக அளிக்கப்பட்ட புகார் பொய்யானது -காவல்துறை விளக்கம்
சென்னை, 12 மார்ச் (ஹி.ச.) திருச்சியைச் சேர்ந்த 22 வயதுடைய கல்லூரி மாணவி ஒருவர், அபிராமபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் ஒன்றை அளித்தார். புகாரில், 09.03.2026 அன்று, காரில் வந்த அடையாளம் தெரியாத 4 நபர்கள் தன்னை வலுக்கட்டாயமாக காரி
மாணவி பொய் புகார்


சென்னை, 12 மார்ச் (ஹி.ச.)

திருச்சியைச் சேர்ந்த 22 வயதுடைய கல்லூரி மாணவி ஒருவர், அபிராமபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் ஒன்றை அளித்தார்.

புகாரில், 09.03.2026 அன்று, காரில் வந்த அடையாளம் தெரியாத 4 நபர்கள் தன்னை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி முகத்தில் மயக்க பவுடரை பூசி, பின்னர் அடையாறில் இறக்கிவிட்டதாகவும், பாலியல் கொடுமை செய்ததாகவும் அதன் பின்னர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும், முன்னதாக, தன்னுடைய வாட்ஸ் அப் எண்ணிற்கு இரண்டு வெவ்வேறு எண்களிலிருந்து மார்ஃபிங் செய்த தன்னுடைய புகைப்படங்களை அனுப்பிய அடையாளம் தெரியாத நபர், அவற்றை, நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பி விடுவதாக மிரட்டியதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பாக மகளிர் போலீசார் புகாரை பெற்று காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு காவல் துணை ஆணையாளர் வனிதா தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தியது.

புகாரின் உண்மைத் தன்மை மற்றும் சம்பவம் தொடர்பான சிசிடிவி உள்ளிட்ட பல்வேறு தடயங்களை சேகரித்தும் புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சென்னை காவல்துறை தெரிவித்தது.

இந்த நிலையில் இந்த மாணவி அளித்த புகார் பொய்யானது என்று விசாரணையில் தெரிய வந்துள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

படிப்பு மற்றும் இதர மன உளைச்சலில் இருப்பதால் மாணவி பொய்யான புகார் அளித்து இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும் சிசிடிவி காட்சிகள் வைத்து விசாரித்த போது, அப்படி ஒரு சம்பவம் நடைபெறவில்லை என தெரிய வந்துள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த புகாரில் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் நீதிமன்றத்தின் மூலமாகவே வழக்கை முடித்து வைக்க முடியும் என்று கூறப்படுகிறது.

Hindusthan Samachar / GOKILA arumugam