Enter your Email Address to subscribe to our newsletters

குஜராத்,12 மார்ச் (ஹி.ச.)
அமெரிக்கா ஈரான் மீது போர் தொடுத்ததால், பாரசீக வளைகுடாவை அரபிக் கடலுடன் இணைக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை மூடி விடுவதாகவும், தடையை மீறி வரும் எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் ஈரான் எச்சரித்திருந்தது.
இந்நிலையில், தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த எண்ணெய் கப்பல் ஒன்று துபாயிலிருந்து குஜராத் துறைமுகத்திற்கு வந்து கொண்டிருந்தபோது, ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
அதன் பிறகு பிரிட்டன், ஜப்பான் போன்ற நாடுகளின் சரக்கு கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், வளைகுடா நாடுகளில் இருந்து ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருட்களை ஏற்றி வரும் சரக்கு கப்பல்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்ஷியுடன் செவ்வாய்க்கிழமையன்று கலந்துரையாடினார்.
அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இஸ்ரேல் நாடுகளைச் சேர்ந்த கப்பல்கள் தாக்கப்பட்டு வரும் நிலையில், இந்திய கொடியுடன் வந்த புஷ்பக் மற்றும் பரிமல் ஆகிய இரண்டு சரக்கு கப்பல்களும் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து செல்ல ஈரான் தற்போது அனுமதி அளித்துள்ளது.
அந்த இரண்டு கப்பல்களும் பாதுகாப்பாக ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து சென்றுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், சீனா, வங்கதேசம் போன்ற நாடுகளின் எண்ணெய் கப்பல்களும் செல்ல ஈரான் அனுமதி கொடுத்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
ஈரான் தொடர்ந்து இந்திய எண்ணெய் கப்பல்களுக்கு அனுமதி அளிக்கும் பட்சத்தில், நாட்டில் நிலவும் எரிபொருள் பற்றாக்குறை கொஞ்சம் கொஞ்சமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / JANAKI RAM