Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 12 மார்ச் (ஹி.ச.)
தூத்துக்குடி விளாத்திக்குளம் பகுதியைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு படித்த மாணவி, இயற்கை உபாதைக்காக தனது வீட்டின் அருகே உள்ள காட்டுப் பகுதிக்குச் சென்றுள்ளார்.
நீண்ட நேரமாகியும் அந்த சிறுமி வீடு திரும்பாததால், சிறுமியின் உறவினர்கள் காட்டுப் பகுதிக்குள் சென்று தேடினர்.
பின்னர் மாயமான மாணவியைக் கண்டுபிடித்துத் தருமாறு அவரது பெற்றோர் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
ஆனால், காவல் ஆய்வாளர் பிரவீனா, புகாரை முறையாக விசாரணை செய்யாமல் அலைக்கழித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மாணவி நேற்று மாலையில் காட்டுப்பகுதியில் முகம் மற்றும் உடலில் காயங்களுடன் பிணமாக மீட்கப்பட்டார்.
அவரது ஆடைகளும் களைந்து கிழிந்த நிலையில் இருந்த நிலையில் கழுத்தை துண்டால் இறுக்கியதற்கான தடயங்களும் இருந்தன.
எனவே மாணவி தனியாக சென்றதை அறிந்த மர்ம நபர்கள் கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு, கொலை செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
பின்னர் போலீசார் மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காவல்துறையினரின் அலட்சியமே மாணவியின் உயிரிழப்பிற்கு முக்கியக் காரணமாக அமைந்ததாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
பெற்றோரை அலட்சியப்படுத்தியது மற்றும் கடமை தவறியது தொடர்பான புகார்களின் அடிப்படையில், நெல்லை சரக டிஐஜி சரவணன் விசாரணை மேற்கொண்டார்.
அதன் அடிப்படையில், காவல் ஆய்வாளர் பிரவீனாவை பணியிடை நீக்கம் செய்து இன்று உத்தரவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b