Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 12 மார்ச் (ஹி.ச.)
கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் இயங்கி வரும் மாநகராட்சி அரசு நடுநிலைப்பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
அவர்களுக்கு கடந்த 10-ஆம் தேதி மதியம் பள்ளியில் உணவு வழங்கப்பட்டது.
அங்கு உணவருந்திய சில மாணவ, மாணவிகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
அவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் பல்லி இருந்ததாக கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, உடல்நலம் பாதிக்கப்பட்ட 44 மாணவ, மாணவிகளும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.
நேற்று மாலையில் அனைத்து மாணவ-மாணவிகளும் சிகிச்சை முடிந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதற்கிடையில் சம்பவம் குறித்து கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுருபிரபாகரன் மற்றும் மாநகராட்சி பள்ளி முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
அப்போது மாணவ - மாணவிகள் சாப்பிட்ட மதிய உணவில் பல்லி இறந்து கிடப்பதை பார்த்தனர்.
பல்லி விழுந்ததை கவனிக்காமல், உணவை சத்துணவு ஊழியர்கள் பரிமாறியதால், அதை சாப்பிட்ட மாணவ -மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது தெரிய வந்தது.
மதிய உணவு தயாரிப்பில் அஜாக்கிரதையாக இருந்த ஊழியர்களிடம் மாநகராட்சி பள்ளி முதன்மை கல்வி அலுவலர் விசாரணை நடத்தினார்.
இந்த விவகாரத்தில், சமையலர், சத்துணவு அமைப்பாளர், உதவியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சமையலர் மனோகரி , உதவியாளர் கமலா மற்றும் சத்துணவு அமைப்பாளர் கௌசல்யா ஆகிய மூவரை பணியிடை நீக்கம் செய்து கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b