Enter your Email Address to subscribe to our newsletters

உடன்குடி, 13 மார்ச் (ஹி.ச.)
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் தலா 660 மெகாவாட் திறனில் இரண்டு அலகுகள் கொண்ட அனல் மின்சார உற்பத்தி நிலையத்தை, ரூ.13 ஆயிரத்து 76 கோடி மதிப்பில் தமிழ்நாடு மின்சார வாரியம் அமைத்து வருகிறது.
இதற்கான கட்டுமானம் பணிகள் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 7-ம் தேதி தொடங்கியது.
உடன்குடி அனல் மின்சார உற்பத்தி நிலையத்துக்கு நிலக்கரி எடுத்து வருவதற்காக உடன்குடி கடற்கரையில் இருந்து கடலில் 9 கிலோ மீட்டர் தூரத்திற்கு கப்பலில் இருந்து நிலக்கரி இறக்குவதற்கான முனையம் அமைக்கப்பட்டு உள்ளது.
மின்சார நிலையத்தின் கட்டுமான பணிகளை மத்திய அரசின் பெல் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
அங்கு கடந்த 2021-2022-ம் ஆண்டு மின்சார உற்பத்தி தொடங்க திட்டமிடப்பட்டது.
கட்டுமான பணிகள் மந்தகதியில் நடந்ததால், திட்டமிட்ட காலத்துக்குள் மின்சார உற்பத்தியை தொடங்க முடியாத நிலை ஏற்பட்டது.
நீண்ட இழுபறிக்கு பின்னர் உடன்குடி மின்சார நிலையத்தின் முதல் அலகில் கடந்த ஆண்டு செப்டம்பர் 11-ந்தேதி இரவு 7.56 மணிக்கு சோதனை ஓட்டம் அடிப்படையில் மின்சார உற்பத்தி தொடங்கியது.
அப்போது 52 மெகாவாட் மின்சார உற்பத்தி செய்யப்பட்டது. இந்த மின்சாரம், மின்வழித்தடத்தில் இணைக்கப்பட்டது.
இது குறித்து மின்சார வாரிய அதிகாரிகள் கூறுகையில்,
உடன்குடியில் தொடர் முயற்சியின் விளைவாக, உடன்குடி அனல் மின்சார நிலையத்தின் முதல் அலகில் சோதனை அடிப்படையில் மின்சார உற்பத்தி நடந்து வந்தது. ஆரம்பத்தில் 'ஹெவி பர்னஸ் ஆயில்' பயன்படுத்தி, மின்சார உற்பத்தி செய்யப்பட்டது.
ஒரு மின்சார நிலையம் முழு திறனில், 72 மணி நேரத்துக்கு தொடர்ந்து மின்சார உற்பத்தி செய்த பின்னர், வணிக மின்சார உற்பத்தி தொடங்கியதாக அறிவிக்கப்படும்.
சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் கப்பலில் இருந்து அனல்மின் நிலையத்திற்கு கொண்டு வருவதற்காக கன்வேயர் பெல்ட் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் 6 லட்சம் டன் நிலக்கரி சேமிப்பு கிடங்கும், கடல் நீரை சுத்தமான நீராக மாற்றும் நிலையம், 400 கிலோ வால்ட் ஸ்வீட்ச்யார்டு போன்ற வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது.
1.50 லட்சம் மரக்கன்றுகள் நட முடிவு செய்யப்பட்டு தற்போது 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. 2-வது அலகிலும் விரைவில் சோதனை ஓட்டம் தொடங்க இருக்கிறது.
இந்தநிலையில் சென்னை, தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், உடன்குடி அனல் மின்சார உற்பத்தி நிலையத்தின் முதல் அலகில் வணிக ரீதியிலான உற்பத்தியை தொடங்கி வைக்கிறார்.
என்று கூறினர்.
Hindusthan Samachar / JANAKI RAM