சென்னையின் முக்கிய சிக்னல்களில் பசுமைபந்தல் அமைக்கும் பணி தொடக்கம் - சென்னை மாநகராட்சி ஏற்பாடு
சென்னை, 13 மார்ச் (ஹி.ச.) தமிழ்நாட்டில் உள்ள சுமார் 8% கோடி மக்கள்தொகையில், 1 கோடி பேர் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலேயே வசித்து வருகின்றனர். பணி மற்றும் படிப்புக்காக இங்கே வருபவர்களில், பெரும்பாலானவர்கள் இங்கேயே தங்கிவிடுகின்றனர். அதன
Installation of Green Canopies


சென்னை, 13 மார்ச் (ஹி.ச.)

தமிழ்நாட்டில் உள்ள சுமார் 8% கோடி மக்கள்தொகையில், 1 கோடி பேர் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலேயே வசித்து வருகின்றனர்.

பணி மற்றும் படிப்புக்காக இங்கே வருபவர்களில், பெரும்பாலானவர்கள் இங்கேயே தங்கிவிடுகின்றனர்.

அதனால், தலைநகர் சென்னையில் உள்ள சாலைகளில் மக்கள் போக்குவரத்து என்பது எப்போதுமே அதிகமாக இருக்கும்.

அதுவும், வேலை மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு சென்று திரும்பும் காலை, மாலை வேளைகளில் வாகன நெரிசல் சற்று அதிகமாகவே இருக்கும்.

தற்போது, கோடைகாலம் தொடங்கிவிட்டது. முன்னெப்போதும் இல்லாத வகையில், வெயிலும் சுட்டெரிக்கத் தொடங்கியிருக்கிறது. அடுத்த மாதம் சட்டசபை தேர்தலுடன் சேர்ந்து வெயிலும் சூட்டை கிளப்பும் என்று தெரிகிறது.

இந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக கோடை காலத்தில், சென்னையில் உள்ள முக்கிய சாலைகளில் இருக்கும் சிக்னல்களில் மாநகராட்சி சார்பில் பசுமை பந்தல்கள் அமைக்கப்பட்டு வந்தது.

சிகப்பு விளக்கு எரியும்போது சிக்னலில் காத்திருக்கும் இருசக்கர வாகன ஓட்டிகளை, வெயிலின் தாக்கம் தெரியாத அளவுக்கு இந்த பசுமை பந்தல் காத்தது.

அதனால், பசுமை பந்தல் திட்டம் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. என்றாலும், கோடை முடிவதற்குள்ளேயே காற்றில் இந்த பசுமை பந்தல் துணிகள் எல்லாம் கிழிந்துபோய் விடுகின்றன.

அதனால், ஆண்டுக்கு ஆண்டு கோடை காலத்தில் புதிதாகவே பசுமைபந்தல் அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அந்த வகையில், இந்த ஆண்டும். பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள முக்கிய சிக்னல்களில் பசுமைபந்தல் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.

வழக்கம்போல், இந்த முறையும் இருசக்கர வாகன ஓட்டிகள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது.

Hindusthan Samachar / vidya.b