Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 13 மார்ச் (ஹி.ச.)
நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராகப் பதவி வகித்து வந்த காளியம்மாள் அதிரடி மற்றும் தனித்துவமான மேடைப் பேச்சுகள் வாயிலாக அரசியல் வட்டாரத்தில் பிரபலமாக அறியப்படுபவர்.
திடீரென அவருக்கும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதன் காரணமாக, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அக்கட்சியில் இருந்து காளியம்மாள் விலகினார்.
இந்நிலையில் சுமார் ஓராண்டுக் கால இடைவெளிக்குப் பிறகு அதிமுகவில் இணைந்துள்ளார்.
சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அவரது முன்னிலையில் இன்று (13.03.2026) முறைப்படி காளியம்மாள் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.
முன்னதாக காளியம்மாள் நாம் தமிழர் கட்சி சார்பில் கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பூம்புகார் தொகுதியிலும், 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் வடசென்னை தொகுதியிலும், 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் போது மயிலாடுதுறை தொகுதியிலும் போட்டியிட்டு கணிசமான வாக்குகளைப் பெற்று கவனம் பெற்றார்.
அதிலும் குறிப்பாக மயிலாடுதுறையில் ஒரு லட்சத்து 27 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று கவனம் ஈர்த்திருந்தார்.
எனவே அவருக்கு அதிமுகவில் முக்கிய பதவியும், வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படலாம் என அரசியல் வட்டாரத்தில் பேச்சுகள் எழுந்துள்ளன.
Hindusthan Samachar / vidya.b