பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் - கனிமொழி எம்.பி.யை சிறைபிடித்த கிராம மக்கள்!
தூத்துக்குடி, 13 மார்ச் (ஹி.ச.) விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கச் சென்ற கனிமொழி எம்.பி.யை பெண்களும், இளைஞர்களும் முற்று
Kanimozhi


தூத்துக்குடி, 13 மார்ச் (ஹி.ச.)

விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கச் சென்ற கனிமொழி எம்.பி.யை பெண்களும், இளைஞர்களும் முற்றுகையிட்டு சிறை பிடித்து எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராம காட்டுப் பகுதியில் பிளஸ் 2 படித்து வந்த 17 வயது பள்ளி மாணவி மார்ச் 11 ஆம் தேதி உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டு கிடந்தார்.

பதைபதைக்கும் இந்த கொடூர கொலை சம்பவத்தில் ஈடுபட்ட உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தியும், மாணவி காணாமல் போன நாளன்று பெற்றோர்கள் கொடுத்த புகாரை வாங்காமல் அலட்சியப்படுத்தி உள்ளனர்.

இதன் காரணமாக குளத்தூர் காவல் நிலைய எஸ்.ஐ. மற்றும் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட போலீசாரை கண்டித்தும் கிராம மக்கள் கடந்த இரண்டு நாட்களாக தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் குறுக்குச்சாலை சந்திப்பில் தொடர்ந்து 12 மணி நேரத்துக்கு மேலாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இன்று

(மார்ச் 13 ஆம் தேதி) நண்பகல் 12 மணி அளவில் உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க கனிமொழி எம்பி மற்றும் அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் வேடநத்தம் கிராமத்துக்கு வருகை தந்தனர். குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்ட கனிமொழி எம்பி, அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் வெளியே வந்த போது கிராம மக்கள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் முற்றுகையிட்டனர்.

அப்போது நாங்கள் இரண்டு நாட்களாக வீதியில் இறங்கி கொளுத்தும் வெயிலில் போராடிக் கொண்டிருக்கிறோம். நேற்று எல்லாம் நீங்கள் ஏன் வரவில்லை என கேள்வி மேல் கேள்வி கேட்டு, குற்றவாளிகளை கைது செய்யாதது ஏன் என கேட்டு

அவரை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

குறிப்பாக, 'நேத்தெல்லாம் எங்கே போனீங்க? இப்போ மட்டும் ஏன் வந்தீங்க? சம்பந்தப்பட்டவங்கள ஏன் இன்னும் கைது பண்ணல?' போன்ற குரல்கள் அங்கு அதிகமாக ஒலிக்கத் தொடங்கின. மாணவியின் மரணத்துக்கு தற்போது வரை நீதி கிடைக்காத நிலையில், கனிமொழி எம்பி மற்றும் கீதா ஜீவனை சிறைபிடித்து மக்கள் தங்களின் எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

விளக்கம் அளித்துக் கொண்டிருந்த கனிமொழி எம்.பி., ஒரு கட்டத்தில் அங்கிருந்து புறப்பட்டு செல்ல முயன்ற போது இளைஞர்களும், பெண்களும் அவரை வழிமறித்து கூச்சலிட்டனர்.

மாவட்ட எஸ்பி மதன் தலைமையிலான போலீசார், கூட்டத்தை கலைத்து கனிமொழி எம்பியையும், அமைச்சர் கீதா ஜீவனையும் பத்திரமாக மீட்டு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் வேடநத்தம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN