Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 13 மார்ச் (ஹி.ச)
தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், கடந்த 10.03.2026 அன்று மாலை வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இது குறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில், குளத்தூர் போலீசார் 'சிறுமி காணவில்லை' என வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.
இந்நிலையில், நேற்று அந்தப் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் சிறுமி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். போலீசார் சிறுமியின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் தடய அறிவியல் நிபுணர்கள் மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்துப் பிரபல செய்தித் தொலைக்காட்சி ஒன்று, விளாத்திகுளம் அருகே பாலியல் கொலை செய்து சிறுமியின் சடலம் துண்டு துண்டாக மீட்பு எனச் செய்தி வெளியிட்டிருந்தது.
இதற்கு மாவட்ட காவல்துறை கடும் மறுப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சிறுமியின் சடலம் சம்பவ இடத்தில் முழுமையாகவே கண்டெடுக்கப்பட்டது. உடல் துண்டு துண்டாக மீட்கப்பட்டது என்பது முற்றிலும் தவறான தகவல்.
சிறுமி பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பது, பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் தடய அறிவியல் நிபுணர்களின் ஆய்வுக்குப் பிறகே உறுதி செய்யப்படும்.
வழக்கு விசாரணையில் இருக்கும் நிலையில், உண்மைத்தன்மை தெரியாமல் வதந்திகளைப் பரப்பிப் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், உயிரிழந்த சிறுமியின் அடையாளத்தை வெளிப்படுத்தும் விதமாக அவரது பெயர் மற்றும் புகைப்படத்தைச் சமூக வலைதளங்களான வாட்ஸ்அப் (WhatsApp), முகநூல் (Facebook) போன்றவற்றில் பகிர்வது சட்டப்படி குற்றமாகும். இந்த உத்தரவை மீறுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்
என மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b